கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆத்மா சிவக்குமார் (53). தொழிலதிபர், சமூக ஆர்வலர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு வலம் வந்தார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிசாமி.
சிவக்குமாரின் உறவினராக ஊட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மூலமாக மாரிசாமிக்கு சிவக்குமார் பழக்கமாகியுள்ளார். வி.ஏ.ஓ பணி வாங்கித் தருவதாகவும், அதற்கு ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் எனவும் சிவக்குமார் கூறியுள்ளார்.
அவரின் பேச்சை நம்பி மாரிசாமி ரூ.8.2 லட்சத்தை சிவக்குமாரின் சகோதரி சத்ய பாமா மற்றும் அவரின் பிசினஸ் பார்ட்னர் மணிகண்டன் ஆகியோரிடம் கொடுத்திருக்கிறார். பணத்தைக் கொடுத்து கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாகியும் ஆத்மா சிவக்குமார் வேலை வாங்கித் தரவில்லை.
இதையடுத்து, மாரிசாமி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். அதனடிப்படையில் ஆத்மா சிவக்குமார், மணிகண்டன், சத்ய பாமா, அவரின் கணவர் ஜெய் கிருஷ்ணன் ஆகியோர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த சிவக்குமாரை போலீஸ் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, “ஆத்மா சிவக்குமார் முன்பு அதிமுகவில் இருந்துள்ளார். அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஆர்.பி. உதயக்குமார், பொன்னையன் ஆகியோரிடன் நெருங்கியத் தொடர்பில் இருந்துள்ளார்.
சினிமாத் துறையிலும் சிலருடன் தொடர்பில் இருந்திருக்கிறார். அந்த பழக்கத்தை வைத்துக் கொண்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணம் வாங்கியுள்ளார்.
தற்போதுவரை 68 பேரிடம் ரூ.2.17 கோடி மோசடி செய்ததாக புகார் வந்துள்ளது. வருவாய்த்துறை, தோட்டக்கலைத்துறை, சுகாதாரத்துறையில் வேலை வாங்கித் தருவாகக் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார். இப்படி மோசடி செய்த பணத்தில் கோவையில் பல இடங்களில் அப்பார்ட்மென்ட் மற்றும் வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார்.
அவரின் சொத்துகளை முடக்க முடிவு செய்துள்ளோம். அதேபோல தலைமறைவாக உள்ள மற்ற மூவரையும் விரைவில் கைது செய்ய உள்ளோம்.” என்றனர்.