ஜாம்நகர்: குஜராத் பேரவை தேர்தலில் அண்ணியை தோற்கடிக்க அவரது நாத்தனார் தேர்தல் களத்தில் பிரசாரம் செய்து வருவதால் கிரிக்கெட் வீரரின் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் ஜாம்நகர் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், அந்த தொகுதியில் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜாவுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜடேஜாவின் சகோதரியும், காங்கிரஸ் தலைவருமான நைனா ஜடேஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், ‘எனது சகோதரர் ஜடேஜாவின் மனைவியாக ரிவாபா அடையாளம் காணப்பட்டாலும், அவருக்கு போதிய அனுபவம் இல்லை. அந்த தொகுதியில் பாஜக வெற்றி பெறாது. சிட்டிங் எம்எல்ஏவுக்கு சீட் மறுக்கப்பட்டதால் அவர் அதிருப்தியில் உள்ளார்’ என்றார். ரிவாபா (அண்ணி) குறித்து நைனா (நாத்தனார்) கூறிய கருத்துகள் தற்போது ஜடேஜா குடும்பத்தின் சண்டையாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவியான ரிவாபா, தொகுதி மக்களை சந்தித்து தீவிர பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.
ஆனால், ரிவாபாவுக்கு எதிராக நைனா ஜடேஜா களமிறங்கியுள்ளார். குஜராத் மகிளா காங்கிரசின் பொதுச் செயலாளரான நைனா, ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் தீபேந்திர சிங் ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார். ஜாம்நகர் வடக்கு தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் கர்சன் கர்மோரும் களத்தில் இறங்கியுள்ளதால், மும்முனை போட்டி நிலவிவருகிறது. ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் கர்சன் கர்மோர் முன்பு பாஜகவில் இருந்தார். ஜாம்நகர் துணை மேயராக இருந்துள்ளார்.
அதனால் அவருக்கு ஜாம்நகரில் செல்வாக்கு இருப்பதாக கூறப்படுகிறது. கிரிக்கெட் உலகில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா, தனது அரசியலின் ஆடுகளத்தில் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை அடிக்கிறாரா? அல்லது அவரது சொந்த குடும்பத்திலிருந்து வரும் தாக்குதல்களால் தோல்வியை சந்திப்பாரா என்பது டிசம்பர் 8ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கை முடிவில் தெரிந்துவிடும்.