மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா கட்சிக்குள் கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், அக்கட்சி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கஜனன் கிர்த்திகர், உத்தவ் தாக்கரே அணியில் இருந்து, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவி உள்ளார்.
மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக இருந்த சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக, அக்கட்சியைச் சேர்ந்த மூத்தத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களை திரட்டிக் கொண்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு போர்க்கொடி தூக்கினார். இதனால் பெரும்பான்மை இல்லை என்பதை உணர்ந்த உத்தவ் தாக்கரே, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து, சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, பாஜக ஆதரவுடன், மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சியை பிடித்தார். முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்ற நிலையில் துணை முதலமைச்சராக தேவேந்திர பட்னவிஸ் பதவியேற்றார்.
இதை அடுத்து சிவசேனா கட்சிக்கு உரிமைக் கோரி, உத்தவ் தாக்கரே அணி, ஏக்நாத் ஷிண்டே அணி இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டன. இரு தரப்பும் உரிமைக் கோரியதை அடுத்து சிவசேனா கட்சியின் வில் அம்பு சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்நிலையில், மும்பை வடமேற்கு மக்களவைத் தொகுதி உறுப்பினர் கஜனன் கிர்த்திகர், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவி உள்ளார். அவர் நேற்று முன்தினம் இரவு வர்ஷா பங்களாவில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் அந்த அணியில் இணைந்தார். சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட கஜனன் கிர்த்திகரை அவரது வீட்டில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே சந்தித்தார். அப்போதில் இருந்து அவர் ஷிண்டே அணியுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் கஜனன் கிர்த்திகர் அதிகாரப்பூர்வமாக ஷிண்டே அணியில் இணைந்து உள்ளார். முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவியதை அடுத்து உத்தவ் தாக்கரே சிவசேனாவில் இருந்து கஜனன் கிர்த்திகர் நீக்கப்பட்டு உள்ளார். மேலும் ஒரு எம்பி ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவி உள்ளது உத்தவ் தாக்கரே அணிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.