புதுச்சேரி: புதுச்சேரியில் அதிகாரிகளை இந்தி பேச நிர்பந்தித்ததாக கூறி, கருப்புக்கொடி ஏந்தி சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினருக்கு எதிராக ஆர்பாட்டம் நடைபெற்றது.
தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் சையத் ஷாஹி சாதி நேற்று புதுச்சேரிக்கு வந்தார். அவர் மரியாதை நிமித்தமாக முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பின்போது அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் உடனிருந்தார். முன்னதாக, சையத் ஷாஹி சாதி புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் சாய் ஜெ.சரவணன்குமார், தலைமை செயலர்(பொறுப்பு) ராஜூ மற்றும் அரசுத்துறை செயலர்கள், இயக்குநர்கள் கலந்து கொண்டனர். இதில் சையத் ஷாஹி சாதி, இந்தியில் பேசியதாகவும், இந்தி தெரியாமல் நீங்கள் எப்படி அதிகாரி ஆனீர்கள் என்று கேள்வி எழுப்பியதோடு, அதிகாரிகளையும் இந்தியில் பேசுமாறு கூறியதாகப் புகார் எழுந்தது.
அவரது இந்த செயலுக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்று தலைமைச் செயலகத்தில் சிறுபான்மை பிரிவு மக்கள் உள்ளிட்டோரை சந்தித்து தேசிய சிறுபான்மை ஆணைய உறுப்பினர் பேசினார்.
இதையடுத்து அவர் பத்திரிகையாளர்களை சந்திக்க திட்டமிட்டார். இதையறிந்த புதுச்சேரி தமிழர்களம் அழகர் தலைமையில் மாணவர் கூட்டமைப்பு, தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக்கழகம், தமிழ் தேசிய பேரியக்கம், அம்பேத்கர் தொண்டர்படை உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர ஆணைய உறுப்பினரின் செயலுக்கு கண்டித்தும், அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் தலைமை செயலகம் முன்பு திரண்டனர்.
தகவல் கிடைத்து அங்கு வந்த காவல்துறை எஸ்.பி பக்தகவச்சலம், பெரியக்கடை காவல் ஆய்வாளர் நாகராஜ் உள்ளிட்ட காவலர்கள், அனுமதியின்றி கூடி ஆர்ப்பாட்டம், போராட்டம் இங்கு நடத்தக்கூடாது என்று கூறி அவர்களை தடுத்து அங்கிருந்து கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.
ஆனாலும், அங்கிருந்து சில அடி தூரம் நகர்ந்த அவர்கள், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை சாலையின் குறுக்கே பேரிகார்டர்களை போட்டு போலீஸார் தடுத்தனர். அப்போது சிறுபான்மையனர் ஆணைய உறுப்பினருக்கு எதிராகவும், அவரது செயலை கண்டிக்காத ஆளுநர், முதல்வரை கண்டித்தும் கருப்பு கொடியை காட்டி கோஷம் எழுப்பினர். இதையடுத்து அனுமதியின்றி கூறி ஆர்ப்பாட்டம் நடத்திய அமைப்பைச் சேர்ந்த 10 பேரை போலீஸார் கைது செய்து, பின்னர் சிலமணி நேரத்தில் விடுவித்தனர்.