பாட்னா: எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் விஷயத்தில் நிதிஷ் குமாருக்கு பீகாரை தாண்டினால் செல்வாக்கு இல்லை என்று பாஜகவை சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி கூறினார். குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல்களுக்கு மத்தியில் பீகார் அரசியல் களத்திலும் ஆளுங்கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் மோதல்கள் அதிகரித்துள்ளன. பாஜக கூட்டணியில் இருந்து விலகி லாலு கட்சியுடன் கூட்டணி வைத்து பீகார் முதல்வராக உள்ள நிதிஷ் குமார் குறித்து, முன்னாள் துணை முதல்வரும், பாஜக எம்பியுமான சுஷில் குமார் மோடி கூறுகையில், ‘பீகாரை தவிர மற்ற மாநிலங்களில் நிதிஷ் குமாருக்கு செல்வாக்கு இல்லை; மாநிலத்திற்குள் அவர் தனது செல்வாக்கை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை.
கடந்த ஒன்றரை மாதங்களில் எதிர்க்கட்சித் தலைவர் யாரும் அவரைச் சந்திக்க வரவில்லை; இவரும் யாரையும் சந்திக்கச் செல்லவில்லை. நம்பிக்கைக்குரிய நண்பரான பாஜகவை விட்டு வெளியேறியதால், அவர் வருத்தப்பட வேண்டியிருக்கும். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்ற பெயரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தை ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் இணைப்பதை தவிர வேறு வழியில்லை. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பீகாருக்கு வந்தார்; நிதிஷ் குமாரை சந்தித்தார்.
ஆனால், அதன்பின் என்ன நடந்தது? இப்போது அவர் தனது கட்சியை தேசிய கட்சியாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி கட்சியை ஒன்றிணைப்பதில் நிதிஷ் குமார் வெற்றிபெறவில்லை. இரு எதிர்க்கட்சிகளும் பல இடங்களில் மோதிக் கொள்கின்றன’ என்றார்.