சென்னை: பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, மறுசீராய்வு மனுதாக்கலின்போது கருத்துகளை வலுவாகப் பதிவு செய்ய வேண்டும் என்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக, தமிழக சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் துரைமுருகன், எஸ்.ரகுபதி, திமுக சார்பில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் ஆகியோர் பங்கேற்றனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, எம்எல்ஏ அசன் மவுலானா, பாமக எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஷ்வரன், வழக்கறிஞர் பாலு, மதிமுக எம்.பி.வைகோ, எம்எல்ஏ டி.சதன்திருமலைகுமார், விசிக எம்பி.க்கள் திருமாவளவன், கே.ரவிக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன், துணைச் செயலாளர் நா.பெரியசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ-க்கள் வி.பி.நாகை மாலி, மா.சின்னதுரை, மமக எம்எல்ஏ-க்கள் எம்.எச்.ஜவாஹிருல்லா, ப.அப்துல் சமது, தவாக எம்எல்ஏ தி.வேல்முருகன், கொமதேக எம்.பி. ஏகேபி.சின்ராஜ், கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளர் சூரியமூர்த்தி மற்றும் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
நூற்றாண்டு காலமாக நாம் போற்றிப் பாதுகாத்து வந்த சமூகநீதிக் கொள்கைக்கு இன்று பேராபத்து சூழ்ந்திருக்கிறது. சாதியின் பெயரால் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களை அதிலிருந்து மீட்டு, அவர்களுக்கு கல்வியையும், வேலைவாய்ப்பையும் கொடுத்து, அனைத்திலும் முன்னேற்றுவதற்குப் பயன்படும் மாபெரும் தத்துவம்தான் சமூகநீதிக் கொள்கை.
ஆனால், பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதுதான் மத்திய பாஜக அரசின் திட்டம். அவர்களுக்கு எந்த நோக்கம் இருந்தாலும், பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு என்பது சமூகநீதிக்கும், அரசியலமைப்புச் சட்டத்துக்கும் முரணானது.
தற்போது 5 நீதிபதிகள் கொண்டஅரசியல் சாசன அமர்வில், 3 நீதிபதிகள் அதை ஆதரித்துள்ளார்கள். ஆனால், 1992-ல் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு, பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளனர்.
ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு கீழே உள்ளவர்கள் இதன் பயனைப் பெறலாம் என்கிறார்கள். அப்படியானால், மாதம் ரூ.66,660 பெறுபவர்கள் ஏழைகளா? தினமும் ரூ.2,222 சம்பாதிப்பவர்கள் ஏழை களா? ஆண்டு வருமானம் இரண்டரை லட்சத்துக்கும் குறைவானவர்கள், வருமான வரி கட்டத் தேவையில்லை என்று சொல்லும் பாஜகஅரசு, ரூ.8 லட்சம் சம்பாதிப்பவர்களை ஏழைகள் என்பது எப்படி நியாயமாகும்?
கிராமமாக இருந்தால் தினமும்ரூ.27-ம், நகரமாக இருந்தால் ரூ.33-ம், அதற்குக் கீழ் சம்பாதிப்பவர்களை வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவர்கள் என்கிறது மத்திய அரசு. இந்த மக்களுக்கு எத்தகைய பொருளாதார உதவிகளையும் அரசுவழங்கலாம். யாரும் தடுக்கவில்லை. என்னை பொறுத்தவரை,இது முன்னேறிய சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு அல்ல. முன்னேறிய சாதியினருக்கான இடஒதுக்கீடுதான்.
இந்திய அரசியலமைப்பின் 103-வது திருத்தம் என்பது சமூகநீதிக்கு எதிரானது. இந்த சட்டத் திருத்தத்தை ஏற்றுக் கொண்டால், காலப்போக்கில் சமூகநீதித் தத்துவமேஉருக்குலைந்து போகும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் 103-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் என்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறும் சமூகநீதித் தத்துவத்துக்கு முரணானது. உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளுக்கும் எதிராக இருக்கிறது.
ஏழைகளில் சாதிப் பிரிவினையைக் கற்பித்து, பாகுபாடு காட்டும் இந்த இடஒதுக்கீட்டை நாங்கள் நிராகரிக்கிறோம். இது தொடர்பாக உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்போது, தமிழக அரசும் உரிய முறையிலும், சமூக நீதியையும், சமத்துவத்தையும் நிலைநாட்டும் வகையில் தனது கருத்துகளை வலுவாக பதிவு செய்ய வேண்டும்.
ஏழை, நலிந்த மக்களின் வறுமையைப் போக்கும், பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் அனைத்தையும் ஆதரிக்கும் நாங்கள், சமூகநீதித் தத்துவத்தின் உண்மை விழுமியங்களைச் சிதைக்க அனுமதிக்கமாட்டோம். சமூகநீதித் தத்துவத்தைக் காக்க, அனைவரும் ஒருங்கிணைந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
இவ்வாறு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. தலைமைச் செயலர் வெ.இறையன்பு நன்றி கூறினார்.
அதிமுக, பாஜக புறக்கணிப்பு: அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என நேற்றுமுன்தினம் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். அதேபோல், அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக பாஜகவும் புறக்கணித்தது. இதுதொடர்பாக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் இந்த இடஒதுக்கீட்டின் மூலமாக ரெட்டியார், நாயுடு, பிள்ளை முதலியார், பிராமணர்கள், மலங்கரா கிறிஸ்தவர்கள், தாவூத் மற்றும் மீர் இஸ்லாமியர்கள் போன்ற79 சமூகத்தினர் பயன்பெறுவார்கள். அனைத்து தரப்பட்ட மக்களின் நலனில் அக்கறை கொண்ட ஒரே கட்சிபாஜக மட்டும்தான். திமுகவை போல் போலி வேஷமணிந்து எங்களுக்கு நடிக்க தெரியாது. ஆகவே, அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக பாஜக புறக்கணிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.