ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே அய்யனார் கோயில் ஆற்றில் நேற்று மாலை காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 150க்கும் மேற்பட்ட பக்தர்களை, போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அய்யனார் கோயிலுக்கு நேற்று ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் சாமி கும்பிட சென்றனர்.
மாலை 3 மணி அளவில் திடீரென மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து அய்யனார் கோயில் ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஓடியது. சாமி தரிசனம் முடிந்த பொதுமக்கள் ஆற்றின் அக்கரையில் இருந்து வரமுடியாமல் தவித்தனர். தகவலறிந்து போலீசார், வருவாய்த்துறை, தீயணைப்பு துறையினர் வந்து ஆற்றில் உள்ள மரங்களில் கயிறு கட்டி 150க்கும் மேற்பட்டோரை பத்திரமாக மீட்டனர்.