திருச்சி: திருச்சி நத்திரபள்ளி வாசல் பகுதியை சேர்ந்தவர் ரெங்கராஜன்(45). திருச்சி காந்தி மார்க்கெட்டில் வெங்காய விற்பனை கடை நடத்தி வருகிறார். மாநகராட்சிக்கு சொந்தமான இந்த கடையை ராஜா(40) என்பவருக்கு, ரெங்கராஜன் மற்றும் அவரது இரு சகோதரர்கள் உள் வாடகைக்கு விட்டுள்ளனர்.
வாடகை பிரச்னை காரணமாக ராஜா மற்றும் ரெங்கராஜன் ஆகியோருக்கு இடையே மோதல் இருந்துள்ளது. நேற்று காலை கடையை காலி செய்யும்படி ெரங்கராஜன் கூறியுள்ளார். ராஜா மறுக்கவே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ரெங்கராஜன் வாட்டர் பாட்டிலில் இருந்த பெட்ரோலை எடுத்து ராஜா மீது ஊற்ற முயன்றார். அப்போது ஒருவர் ரெங்கராஜனின் சட்டையை பிடித்து பின்பக்கமாக இழுக்கவே அவரது உடலில் பெட்ரோல் கொட்டியதோடு, அவர் கையில் வைத்திருந்த லைட்டரை அழுத்தியதால் தலையில் தீப்பற்றி எரிந்தது. இதனால் அலறியபடி சாலையில் ஓடினார். அப்பகுதியினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து, அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.