தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் ஏரிகள், குளங்கள் நிரம்பிவருகின்றன. சீர்காழியில் வரலாறு காணாத அளவு நேற்று ஒரேநாளில் 44 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இந்தச் சூழலில் அடுத்த 24 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
14,15, 16 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான அறிவிப்பு:
13.11.2022: குமரிக்கடல் பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
14.11.2022: லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.