“தமிழர்கள் மத்திய அரசிடம் இருந்து கருணையை எதிர்பார்க்க முடியாது” என்று, ராஜீவ் காந்தி கொல்லை வழக்கிலிருந்து விடுதலையான பின்னர், ரவிச்சந்திரன் செய்தியாளரிடம் பேட்டியளித்திருக்கிறார். இதை அவர் சொல்ல காரணம்தான் என்ன? அதையும் அவரே விளக்கினார். அதைக் காண்போம்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் தனது தனிப்பட்ட அதிகார பிரிவை பயன்படுத்தி கடந்த மே மாதம் விடுவித்தது. இதனைதொடர்ந்து, அதே வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களையும் விடுவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தை நாடினர். அந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்த மனு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கும் உத்தரவிட்டது. கிடைக்கப்பெற்ற பதில்களை அடிப்படையாக வைத்து, அதன்கீழ் உச்சநீதிமன்ற நீதிபதிகள், “ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி, ரவிச்சந்திரன் உட்பட 6 பேரும் விடுதலை செய்யப்படுகின்றனர். 7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை முடிவு மீது முடிவெடுக்க ஆளுநர் காலம் தாழ்த்தியதை கணக்கில் கொள்ளவேண்டும். பேரறிவாளனைப் போலவே மீதமுள்ள 6 பேரும் தங்களுக்கான நிவாரணங்களை கேட்க தகுதி உடையவர்கள்” என தெரிவித்தனர்.
ஆறு பேரும் விடுதலையான வழக்கு கடந்து வந்த பாதை குறித்த விவரம்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு: அனைவரையும் விடுவித்து உச்சநீதிமன்றம் உத்தரவு!
இதைத்தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் இருந்து ரவிச்சந்திரன் விடுதலையானார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியபோது, “உச்சநீதிமன்றம் 6 பேரை விடுதலை செய்தது ஆறுதல் தருகிறது. இந்த மகிழ்ச்சி உலக தமிழ் இனத்தின் மகிழ்ச்சி, தமிழ்கூறும் நல் உலகம் அனைவருக்கும் நன்றி, துயரம் எனக்கானது மகிழ்ச்சி அனைவருக்குமானது, எங்களுக்காக உயர்நீத்த செங்கொடியின் தியாகத்தை என் நெஞ்சில் ஏந்துகிறேன். எங்களது விடுதலைக்கு உதவிய தமிழக முதல்வர் ஸ்டாலின், எங்கள் விடுதலைக்கான திறவுகோலை தந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கும் நன்றி, அவர் மறைந்தாலும் அவரை நினைவுகூறுகிறேன்.
மேலும் எமது விடுதலைக்கு உழைத்த, போராடிய, சிறைபட்ட அனைவருக்கும் நன்றி, அனைவரையும் நேரில் சந்தித்து எனது நன்றியை தெரிவிக்கவுள்ளேன். சமூகத்திற்கு பயன்படும் வகையில் எனது வருங்கால முடிவு எடுப்பேன். ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள எனது தோழர்களோடு குடும்பத்தினரோடு கலந்துமுடிவெடுப்பேன், நூல்கள் எழுதுவேன். எங்களுக்கு கிடைத்தது தாமதமான நீதி என்பது அனைவருக்குமே தெரியும். அவச்சொல்களுக்கு ஆளாகி இலக்கு ஒன்றே குறியாக வைத்து போராடிய வழக்கறிஞர் திருமுருகன் அவர்களுக்கு நன்றி.
எனது தாயார் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த விடுதலை இத்தனை ஆண்டின் வலிக்கான நிவாரணி. என் தாய்க்கும், எனது சகோதரரின் குடும்பத்தினர் எனக்கு உறுதுணையாக இருந்தனர், அவர்களின் நம்பிக்கையாலும், தோழர்களின் நம்பிக்கையாலும் விடுதலை ஆகியுள்ளேன். தமிழகத்திற்கு முன் உதாரணமாக `அரசியலுக்கு மதுரை’ என்பது போல எங்களது விடுதலைக்கான தொடக்க இடமும் மதுரை தான்.
30 ஆண்டு காலமான மிகப்பெரிய துயரம் மற்றும் வலிக்கு ஒரு முடிவு வந்துள்ளது. சிறப்பு அகதி முகாம் என்பதும் ஒரு வகையில் சிறை தான். மத்திய அரசு எங்களுடைய விடுதலைக்கு சட்டத்திற்கு அப்பாற்பட்டு சில உத்திகளை கையாண்டு எங்களின் விடுதலையை தடுத்தது ஆனால் மாநில அரசு தன் உறுதியான சட்ட நடவடிக்கையை மேற்கொண்டதால் தற்பொழுது எங்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது. நளினி, ஜெயக்குமார், நான், ராபர்ட் பையர்ஸ் விடுதலை 2004 லே சாத்தியமானது. மத்திய அரசிடம் இருந்து தமிழர்கள் கருணையை எதிர்பார்க்க முடியாது. அதிலும் குறிப்பாக இலங்கை தமிழர்கள், அயல்நாட்டு தமிழர்கள் நிச்சயம் எதிர்பார்க்க முடியாது. திருமணம் குறித்து யோசிப்பதற்கு உண்டான மனநிலையில் தற்போது நான் இல்லை. 30 வருட சிறை வாழ்க்கையில் நான் இழந்தது குறித்து கணக்கிட முடியாது.
ஜப்பான், சீனா போன்ற முன்னேறிய நாடுகளில் அப்பாவிகள் தண்டிக்கப்பட்டால் அவர்கள் இறந்த பிறகும் அவரது உறவினர்களாலோ அல்லது சட்ட ஆய்வு மாணவர்கள் மூலமாகவோ இவர் குற்றவாளி இல்லை என்பதை உறுதிப்படுத்த முடியும். அவர் மீது விழுந்த பழியை துடைக்க முடியும். ஆனால் இந்த சட்ட திருத்தம் இந்தியாவில் இல்லை. இந்த சட்ட திட்டத்தை புதிதாக கொண்டு வருவதற்கு துறை சார்ந்த அமைச்சர்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற முறையில் புதிய சட்ட திருத்தத்தை கொண்டு வர முயற்சிப்போம்.
இந்த வழக்கு இன்னும் முடிவு பெறவில்லை. இருப்பினும் இதனால் ஒன்றும் ஆகப்போவதில்லை. இந்த வழக்கில் உண்மையிலேயே தொடர்புடையவர்கள் மிகப் பெரிய சக்திகள். வெளிநாடு மற்றும் உள்நாட்டு சக்திகள் தொடர்பு இருக்கிறது இவர்கள் மீது கை வைக்க முடியாது. ஆனால் நாங்க மிக எளிதான நபர்கள் என்பதனால் எங்களை வைத்து முடித்துக் கொள்ள பார்த்தார்கள். இதுதான் நடந்தது.
26 நபர்களுக்கு தூக்கு என முடிவாகி பிறகு, 26 பேரும் விடுதலை ஆனதற்கு தமிழர்களின் அறம் தான் காரணம். காலங்காலமாக இந்த வழக்கு நிச்சயம் பேசப்படும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக இந்த வழக்கை விவாத பொருளாக மாற்ற முயற்சிப்போம்” என்றார்
இதேபோல செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ-க்கு ரவிச்சந்திரன் அளித்த பேட்டியில், “வட இந்திய மக்கள் எங்களை பயங்கரவாதிகளாகவோ அல்லது கொலையாளிகளாகவோ பார்க்காமல் பாதிக்கப்பட்டவர்களாக பார்க்க வேண்டும். யார் பயங்கரவாதி அல்லது சுதந்திரப் போராட்ட வீரர் என்பதை காலமும் சக்தியும் தீர்மானிக்கின்றன. ஆனால் நாம் பயங்கரவாதி என்ற குற்றச்சாட்டை சுமந்தாலும் காலம் நம்மை நிரபராதி என்று தீர்ப்பளிக்கும்” என்றுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM