சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நகரின் ஒருசில பகுதிகளில் பரவலாக இடி, மின்னலுடன் மழை பெய்தது. மெரினா, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் விட்டு விட்டு மழை பெய்தது. இந்நிலையில் சென்னையில் சேப்பாக்கம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி நகர், எழும்பூர், வேப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை பரவலாக இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது.
மேலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், திருத்தணியில் அதிகபட்சமாக 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ஊத்துக்கோட்டை 9 செ.மீ, சோழவரம் 8 செ.மீ, பொன்னேரி, தாமரைப்பாக்கம் தலா 6 செ.மீ, பூவிருந்தவல்லி 5 செ.மீ, ஆவடி, பூண்டி, ஜமீன் கொரட்டூர் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ளப் அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வைகை அணையிலிருந்து விநாடிக்கு 4,230 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது.