புதுடெல்லி: இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக் சமீபத்தில் இங்கிலாந்து பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற தலைமைத்துவ மாநாட்டில் பங்கேற்க இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வந்தார். மாநாட்டில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
நாம் இப்போது ஆபத்தான மற்றும் கொந்தளிப்பான காலத்தில் வாழ்ந்து வருகிறோம். கரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைக் கடந்து வந்துள்ளோம். தற்போது ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். அவர் ஒரு வலுவான தலைவர். அவரது தலைமையின் கீழ் இங்கிலாந்து, இந்தியா இடையிலான இரு நாட்டு உறவு உச்சத்துக்கு செல்லும் என்று நான் நம்புகிறேன்.
இங்கிலாந்து, இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட அடுத்த தீபாவளி வரை நாம் காத்திருக்கக்கூடாது. இதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்யவேண்டும். அதற்கு இரு நாட்டுத் தலைவர்களும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.