விட்டுச்சென்ற கணவன்.. மகனுக்காக தடைகளை உடைத்த தாய்.. இது போபால் பெண் டிரைவரின் கதை!

21ம் நூற்றாண்டில் நவீன உலகம் எட்டா உயரத்திற்கு வளர்ந்திருக்கும் வேளையிலும், பாலின சமத்துவத்திற்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் போராட வேண்டிய சூழலே இருந்து வருகிறது. அந்த வகையில், பெற்ற மகனையும், கட்டிய மனைவியையும் கணவன் நிர்கதியாக விட்டுச் சென்றதை அடுத்து ஒற்றை பெண்ணாக இருந்து தனது மகனை வளர்த்து வருகிறார் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஜோதி வெர்மா.
ஜுமேரடி பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஜோதியை அவரது கணவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு விட்டுச் சென்றிருக்கிறார். இதனையடுத்து தனது 11 வயது மகனை படிக்க வைத்து ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்ற கனவோடு ஜோதி அயராது ஆட்டோ ஓட்டி வருகிறார்.
எண்ணற்ற தடைகளை உடைத்து தன்னையும், தன் மகனையும் பார்த்து வருகிறார் ஜோதி. இது குறித்து ANI செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள ஜோதி, “சுற்றி இருக்கிறவர்கள் பெரும்பாலும் என்னை பற்றி எள்ளி நகையாடுவதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர்கள் முன்பு தினந்தோறும் வலுவானவராகவே நிற்கிறேன்.
ALSO READ:  
”பருவங்கள் மாறி வர வருடங்கள் ஓடி விட..” -மகளின் 20 வருஷ போட்டோக்களை timelapse செய்த அப்பா!
சக ஆட்டோ ஓட்டுநர்கள் கூட எனக்கு அடிக்கடி தொந்தரவு கொடுத்து வருகிறார்கள். ஆனால் என் மகன் ராணுவத்தில் சேர வேண்டும் என்பதற்காகவே அல்லும் பகலுமாக உழைத்து வருகிறேன். என் கணவர் எங்களை விட்டுச் சென்ற பிறகு முதலில் சின்னதாக இட்லி, தோசை கடை வைத்து நடத்தி வந்தேன். ஆனால் அதில் பல பிரச்னைகள் எழுந்தது.
அதன் பிறகு வீட்டு வேலை பார்த்த போது அங்கிருக்கும் சில பிள்ளைகள் என் மகனை கிண்டல் செய்து வந்தார்கள். ஆகையால் என்னுடைய நகையெல்லாம் விற்று ஆட்டோ வாங்கி அதனை ஓட்டி எங்களது வாழ்வாதாரத்தை பார்த்து வருகிறேன்.” எனக் கூறியுள்ளார்.
ஜோதி, போபாலில் உள்ள வான் விஹார் மற்றும் லேக் வியூ பகுதிகளில் தினமும் ஆட்டோ ஓட்டுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். பள்ளி முடிந்ததும் மகனும் ஜோதியுடன் சேர்ந்து ஆட்டோவில் சென்று படித்து வருகிறான். தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜோதி மகனுக்கு பாடம் சொல்லி கொடுத்து வருகிறார்.
image
வான் விஹார் பகுதிக்கு ஜிதேந்திரா என்ற சுற்றுலா பயணி ஒருவர், “குடும்பத்தை காப்பாற்றுவதற்காக பெண் ஒருவர் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுவது பெருமையாக இருக்கிறது. மற்ற பெண்களுக்கு உந்துதலாக இருக்கிறார் ஜோதி” எனக் கூறியுள்ளார். இதனிடையே, “இந்த மார்டன் உலகத்திலும் ஒரு பெண்ணாக ஆட்டோ ஓட்டுவது சவால் நிறைந்த பணியாகவே இருக்கிறது. சமயங்களில் ஆட்டோ ஸ்டாண்டில் கூட என்னை இருக்க விட மாட்டார்கள். ஆனால் இந்த மாதிரியான புறக்கணிப்புகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டுதான் என் பணியை செய்து வருகிறேன்” என ஜோதி வெர்மா பெருமிதத்துடன் கூறியுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.