அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது. அதில் தேர்தலில் வெற்றி பெற்றால், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி பெயரை மாற்றுவோம் என்றும் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் வாக்குறுதி தரப்பட்டுள்ளது. குஜராத்தில் வரும் டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் 2 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, தீவிர பிரசாரம் நடந்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அகமதாபாத் கட்சி அலுவலகத்தில் கட்சியின் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட், தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதில் தரப்பட்டுள்ள வாக்குறுதிகள்:
* காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவா க்கப்படும். அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு உறுதி செய்யப்படும்.
* தனியாக வாழும் பெண்கள், விதவைகள் மற்றும் வயதான பெண்களுக்கு மாதம் ரூ.2,000 நிதி வழங்கப்படும். பெண்களுக்கு முதுகலை பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும்.
* ரூ.3 லட்சம் வரை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்.
* அனைவருக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.
* வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.3000 நிதி உதவி.
* ரூ.500க்கு வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் வழங்கப்படும்.
* அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தின் பெயர் மீண்டும் பழைய படி சர்தார் வல்லபாய் படேல் என மாற்றம் செய்யப்படும்.
* ₹10 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை, ₹5 லட்சம் வரை இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் மருந்துகளை வழங்குவதுடன், மாநிலத்தில் தகுதி வாய்ந்த அனைவருக்கும் ₹4 லட்சம் கொரோனா இழப்பீடு வழங்கப்படும்.
* குஜராத்தில் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் 11 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட உத்தரவு திரும்பப் பெறப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.