புதுடெல்லி: குஜராத்தில் 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இக்கட்சியில் முதன் முறையாக 1998-ல் அப்துல் கனி குரைஷி எனும் முஸ்லிம் வேட்பாளருக்கு ஒரு தொகுதியில் வாய்ப்பளிக்கப்பட்டது.
இவர் காங்கிரஸின் முஸ்லிம் வேட்பாளரான இக்பால் படேலிடம் சுமார் 26,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அப்போது முதல் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு பாஜக வாய்ப்பு அளிக்கவில்லை. உ.பி., ம.பி., உத்தராகண்ட், சத்தீஸ்கர், இமாச்சல் ஆகிய மாநிலங்களைப் போல், குஜராத்திலும் பாஜக சார்பில் முஸ்லிம்கள் போட்டியிடாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், முஸ்லிம்களுக்கு காங்கிரஸில் மட்டுமே போட்டியிடும் வாய்ப்புகள் கிடைத்தன. இதன் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து கடந்த 2017 தேர்தலில் 6-ல் 3 முஸ்லிம்கள் மட்டும் வெற்றி பெற்றனர். இருப்பினும், முஸ்லிம்களின் வாக்குகள் தொடர்ந்து காங்கிரஸுக்கு கிடைத்தன. இந்த முறை முஸ்லிம் வாக்குகளைப் பறிக்க ஆம் ஆத்மி மற்றும் அகில இந்திய மஜ்லீஸ்-எ-இத்தஹாதுல் முஸ்லிமின் (ஏஐஎம்ஐஎம்) ஆகிய கட்சிகள் போட்டியில் உள்ளன. இவற்றில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் கட்சி, 3 தொகுதிகளில் முஸ்லிம்களுக்கு வாய்ப்பளித்துள்ளது. ஹைதராபாத் எம்.பி.யான அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம், 40 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது.
குஜராத்தின் சிறுபான்மையினரில் அதிக எண்ணிக்கையாக சுமார் 10% முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். இங்கு மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் சுமார் 25-ல் முஸ்லிம்கள் கணிசமாக இருந்தனர். இவர்களும் 2002 கோத்ரா கலவரத்துக்குப் பிறகு தங்கள் தொகுதிகளில் இருந்து இடம் மாறிவிட்டனர். இவர்களது வாக்குகளும், இந்த தேர்தலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் ஏஐஎம்ஐஎம் ஆகிய கட்சிகளுக்குள் பிரியும் சூழல் உருவாகி உள்ளது.
இந்நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பில்கிஸ் பானு வழக்கில் விடுதலையானவர்களை ‘கலாச்சாரமான பிராமணர்கள்’ எனப் புகழ்ந்த சந்திரசிங் ரவுஜிக்கு கோத்ரா தொகுதியில் பாஜக வாய்ப்பளித்துள்ளது. இவர் பில்கிஸ் பானு வழக்கின் 11 கைதிகள் விடுதலைக்கான குழுவிலும் இடம் பெற்றவர். இதேபோல, 2002 கலவரத்தில் பாத்தியாவில் 97 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இவ்வழக்கில் சிக்கிய 16 பேரில் ஒருவர் மனோஜ் குல்கர்னி. தற்போது ஜாமீனில் உள்ள மனோஜின் மகளான பாயல் குல்கர்னிக்கு பாஜக சார்பில் அகமதாபாத்தின் நரோடா தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.