தமிழகத்தை போலவே கேரளாவிலும் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கேரளா முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
குறிப்பாக தமிழக – கேரளா எல்லை மாவட்டமான இடுக்கி மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இடுக்கி மாவட்டத்தில் இன்று வெளுத்து வாங்கிய கன மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, கேரளாவின் தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாடு, கேரளாவின் ஒருசில பகுதிகளில் கனமழை முதல் மிகக்கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. கர்நாடகாவின் தெற்கு உட்பகுதிகள், ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திரா, லட்சத் தீவுகள் ஆகியவற்றில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. முன்னதாக இடுக்கியில் நேற்று மாலை நிகழ்ந்த திடீர் நிலச்சரிவில் டெம்போ ஒன்று 25 சுற்றுலா பயணிகளுடன் சிக்கிக் கொண்டது.
இதில் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் ஓட்டுநரை மட்டும் காணவில்லை என்று சொல்லப்படுகிறது. அவரை இடுபாடுகளுக்குள் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்மழையால் கேரளாவின் மட்டுப்பட்டி மற்றும் மூணாறு சாலைகள் பலத்த சேதமடைந்துள்ளன. இதனால் அவ்வழியே செல்லும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.