சரித்திரம் என்பது எப்போதுமே பல மர்மங்களை உள்ளடக்கியதாகத்தான் இருந்துவந்திருக்கிறது. சில சரித்திர ஆய்வாளர்கள் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் நம்புவதற்குக் கடினமானவை. அதுவும் செவிவழிச் செய்திகள் இவற்றுடன் கலந்து நம்மை அடையும்போது நம்பகத்தன்மை மேலும் கொஞ்சம் குறையும். அதேசமயம் பொய்கள் என்று ஒதுக்க முடியாத அளவுக்கு அவற்றில் பல்வேறு கோணங்கள் இருக்கும். அப்படிப்பட்ட சுவாரஸ்யமான அதிசயங்களையும் மர்மங்களையும் விநோதங்களையும் இந்தத் தொடர் விவரிக்கிறது.
இந்தத் தொடரின் பிற அத்தியாயங்களைப் படிக்க, இங்கே க்ளிக் செய்யவும்.
1947இல் தென் அமெரிக்க ஏர்வேஸ் என்ற விமான சர்வீஸ் நிறுவனத்தின் ஸ்டார்டஸ்ட் என்ற விமானம் பதினோரு பேரைச் சுமந்து சென்றது. அது திடீரென மாயமாக மறைந்து விட்டது.
அர்ஜெண்டினாவில் உள்ள பியூனஸ் ஏர்ஸ் நகரிலிருந்து சிலியில் உள்ள சாண்டியாகோ நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது அந்த விமானம். ஜூலை 29, 1947 அன்று கிளம்பிய இந்த விமானம் சாண்டியாகோ போய்ச் சேரவில்லை. பயணிகளில் பாலஸ்தீனம், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள்.
மறைந்த இந்த விமானத்தைப் பல குழுக்கள் அமைத்து பெரிய அளவில் தேடினார்கள். அந்த விமானத்தில் பயணித்தவர்களுக்கு என்ன ஆனது என்பது புலப்படவே இல்லை. இதனால் அந்தப் பயணிகளின் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் கொஞ்ச நஞ்சமில்லை. இறந்திருந்தால் கூட காலப்போக்கில் மனம் அதை ஏற்றுக்கொண்டு விடும். ஆனால் என்ன ஆனார்கள் என்பதே தெரியவில்லை என்றால் உறவினர்களின் மனம் தொடர்ந்து ரணமாகிக் கொண்டே இருக்கும் இல்லையா?
அந்த விமானத்தில் ஆறு பயணிகளும் விமான நிறுவனத்தைச் சேர்ந்த ஐந்து ஊழியர்களும் இருந்தனர். கேப்டனின் பெயர் ரெஜினால்ட் குக். அனுபவசாலி. இரண்டாம் உலகப்போரின்போது போர் விமானியாகப் பணிபுரிந்தவர். பிரிட்டனின் உயரிய விருதைப் பெற்றவர். அந்தப் பயணத்தின் போது கீழே ரேடியோ சிக்னல்களைக் கவனித்துக் கொண்டிருந்த டென்னிஸ் ஆர்மர் என்பவரும் திறமைசாலி, அனுபவசாலி. இவர்களை மீறி என்னதான் நடந்திருக்கும்? விடை கிடைக்கவில்லை.
53 வருடங்களுக்குப் பிறகு அதாவது 2000ம் ஆண்டில் ஆண்டெஸ் மலைப் பகுதி ஒன்றுக்குள் அந்த விமானத்தின் பாகங்கள் வெளியே தெரியத் தொடங்கின. அதாவது கடைசியாக அந்த விமானம் எங்கே காணப்பட்டதோ அங்கிருந்து சுமார் முப்பது மைல் தூரம் தள்ளி!
விமானம் பயணித்த காலகட்டத்தில் பெரும் புயல் எதுவும் வீசி விடவில்லை. வானத்தில் மிதந்து வந்த பொருள் எதுவும் அதன் மீது மோதியதற்கான ஆதாரம் இல்லை. பின் என்னதான் நடந்திருக்கும்?
ஒருவழியாக விளக்கம் கிடைத்தது. அந்த விமானம் 7,300 மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. இந்த உயரத்தில் ஒருவித காற்று மேற்கு திசையிலிருந்து வீசிக்கொண்டிருக்கும். அதன் வேகம் மணிக்கு 100 மைல். (இந்த விவரங்கள் எல்லாம் அந்தக் காலகட்டத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை). ஜெட் ஸ்ட்ரீம் என்று அழைக்கப்படும் இந்த வகை காற்று ஒட்டுமொத்தமாகவோ இரண்டாகப் பிரிந்தோ வெகு வேகமாகப் பாயக் கூடியது.
மேற்படி விமானம் அந்த வேகமான காற்றை எதிர்த் திசையில் சந்தித்தது. இதன் காரணமாக விமானத்தின் வேகம் குறையத் தொடங்கியது. ஆனால் இதை விமான ஒட்டி உணரவில்லை. அவரது கணக்குப்படி விமானம் ஆண்டெஸ் மலையைத் தாண்டிவிட்டது. ஆனால் உண்மையில் விமானத்தின் வேகம் குறைந்ததால் அந்த மலையை அவர்கள் அப்போது தாண்டியிருக்கவில்லை. மேகமும் அழுத்தமாகச் சூழ்ந்திருந்ததால் அந்த மலையை பைலட் குழுவினரால் பார்க்க முடியவில்லை.
ஒரு கட்டத்தில் சாண்டியாகோ விமானநிலையத்தை நெருங்கிவிட்டதாக எண்ணிக்கொண்டு விமானத்தை விமான ஓட்டி இறக்க, அது மலைப்பகுதியில் மோதியது. மிக வேகமாக மோதியதால் அந்தப் பகுதியின் பனிப் பகுதிகள் வெடித்துச் சிதறி அந்த விமானத்தை மூடிக்கொண்டன.
மலையில் விமானம் மோதுவது என்பது பெருத்த சேதத்தை விளைவிக்கும் என்பது பலமுறை நிரூபணமாகியிருக்கிறது. இதே ஆண்டெஸ் மலையில் 1972-ல் ஒரு விமானம் மோதியபோது அதன் பகுதிகள் எங்கே விழுந்தன என்பதைச் சுலபத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை. இறந்தவர்களின் உடலைத் தின்று உயிரோடு இருந்தவர்கள் பசியைத் தீர்த்துக் கொண்டனராம். இருவர் மட்டும் மிகுந்த ரிஸ்க் எடுத்து அங்கிருந்து தப்பி வெளியேறி நடந்ததைக் கூற மீதி அங்கே மாட்டிக்கொண்டவர்கள் காப்பாற்றப்பட்டனர். பயணம் செய்த 45 பேரில் 16 பேரை மட்டுமே இப்படிக் காப்பாற்ற முடிந்தது.
1985ல் ஜப்பானிய போயிங் விமானம் ஒன்று டோக்கியோவின் அருகிலுள்ள ஒசுடகா மலையின் மீது மோதியதில் 520 பேர் உயிரிழந்தனர்.
‘மலை போல வந்த சோதனை’ என்று உவமையாகக் கூறுவார்கள், சில விமான ஓட்டிகளுக்கு மலையே பெரும் சோதனையாக விளங்கி வருகிறது.