கூடலூர்: கூடலூர் நகராட்சி 2வது வார்டு கோல்டன் அவென்யூ குடியிருப்பு பகுதிக்கு மழைக்காலத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலத்திற்கு பதிலாக தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. நிரந்தர பாலம் வெகு விரைவில் அமைக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்த 2020ம் ஆண்டு பெய்த கனமழை காரணமாக இப்பகுதி வழியாக ஓடும் பாண்டி ஆற்றின் கிளை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோல்டன் அவென்யூ குடியிருப்பு பகுதிக்கு செல்லும் சாலையில் இருந்த பாலம் துண்டிக்கப்பட்டது. இதே மழைக்காலத்தில் துப்புக்குட்டி பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் பாலங்கள் துண்டிக்கப்பட்டன. இதனால், இப்பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். 2 வருடங்கள் ஆகியும் பாலம் சீரமைக்கும் பணிகள் நடைபெறாததால் விரைவாக பாலத்தை சீரமைக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், கடந்த மழைக்காலத்தில் மங்குழி, தோட்ட மூலா பகுதிகளிலும் பாலங்கள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
மங்குழி பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்வதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் தற்காலிக நடைபாலம் அமைக்கப்பட்டது. தற்போது, கோல்டன் அவென்யூ பகுதிக்கு செல்வதற்காக உடைந்த பாலத்துக்கு பதிலாக தற்காலிக பாலம் கூடலூர் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப்பாலத்தை நேற்று நகராட்சி தலைவர் பரிமளா திறந்து வைத்தார். நகராட்சி ஆணையர் பிரான்சிஸ் சேவியர், துணைத் தலைவர் சிவராஜ், வார்டு உறுப்பினர் சகிலா, நகராட்சி பொறியாளர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தனர். இது குறித்து நகராட்சி நிர்வாகம் சார்பில் கூறுகையில்,‘‘சேதத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் சேதமடைந்த பாலங்களுக்கு பதிலாக புதிய பாலங்கள் அமைக்கப்பட்டு சாலைகள், நடைபாதைகள் சீரமைக்கப்படும். தற்போது, கோல்டன் அவென்யூ பகுதிக்கு செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பாலத்தில் பைக் மற்றும் ஆட்டோக்கள் சென்றுவர முடியும்’’ என்றனர்.