கடந்த மாதம் 16 ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கிய 8-வது T20 உலகக்கோப்பை இன்று இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. மொத்தம் 16 அணிகள் பங்குபெற்ற இப்போட்டியில் அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் மட்டுமே முன்னேறின. அதில் நியூசிலாந்துடன் மோதி வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணியும், இந்தியாவுடன் மோதி வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியும் இன்று(13.11.2022) போட்டியை எதிர்கொள்கிறது. 2009-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியும், 2010-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியும் 3-வது முறையாக இறுதிப் போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. இதனிடையே பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குத் தேர்வான நிலையில், இந்திய அணியின் தோல்வியைக் கிண்டல் செய்யும் வகையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ட்விட்டரில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.அப்பதிவில், “எனவே, இந்த ஞாயிற்றுக்கிழமை இறுதி போட்டியில் 152/0 vs 170/0” என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைப்பெற்ற T20 உலகக்கோப்பை லீக் சுற்றில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி 152 சேர்த்து விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்றத்தையும், தற்போது நடைப்பெற்ற போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 170 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றத்தையும் அவர் குறிப்பிட்டு இந்த “152/0 vs 170/0” பதிவை அவர் பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமரின் இப்பதிவிற்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அப்பதிவில், “எங்களுக்கும், உங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், நாங்கள் வெற்றிபெறும்போது நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், ஆனால் நீங்கள் மற்றவர்கள் தோற்கும் போது மகிழ்ச்சியடைகிறீர்கள். அதனால்தான் உங்கள் சொந்த தேசத்தின் நலனில் கவனம் செலுத்த முடிவதில்லை” என்று இர்பான் பதான் பதிவிட்டுள்ளார்.