வால்பாறையில் டேன் டீ நிர்வாகத்தை மூடும் உத்தரவை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட இரு அதிமுக எல்எல்ஏக்கள் உட்பட் 100-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் சின்கோனா, பெரியகல்லார். சின்னக்கல்லார். ரயான் விஷன். உபாசி போன்ற எஸ்டேட் பகுதிகள் உள்ளன. இதில் சுமார் 600-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் தற்போது வேலை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், கடந்த மாதம் வால்பாறை, கூடலூர், போன்ற பகுதியில் இயங்கிவரும் டேன் டீ தொழிற்சாலைகள் மூடப்படும் என அரசு அறிவித்தது. இதனால் டேன் டீ தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் இருந்து வருகிறார்கள்.
இதையடுத்து வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் டேன் டீ நிர்வாக அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது டேன் டீ நிர்வாகத்தை மூடும் நோக்கத்தோடு செயல்படுகிறது. அதை அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி 13 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை வால்பாறை பழைய பேருந்து நிலையம் பகுதியில் எம்எல்ஏ அமுல் கந்தசாமி மற்றும் கூடலூர் எம்எல்ஏ ஜெயசீலன் ஆகியோர் தலைமையில் அதிமுகவினரும் தொழிலாளர்களும் ஒன்றிணைந்து உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் இடத்திற்கு ஊர்வலமாக வந்தனர். அப்போது வால்பாறை டிஎஸ்பி சீனிவாசன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில் உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை சார்பாக அனுமதி வழங்கப்படாத நிலையில், இரண்டு எம்எல்ஏ-க்கள் உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் வால்பாறை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM