சுமார் 2.1 கோடி ரூபாய்க்கு ஸ்பெயின் நாட்டில் உள்ள கிராமம் ஒன்று மொத்தமாக விற்பனை செய்யப்பட இருப்பதாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கிராமத்தில் 44 வீடுகள், தேவாலயம், பள்ளி, முனிசிபல் நீச்சல் குளம், ஹோட்டல் ஆகியவற்றுடன் சிவில் காவலர்களுடைய படை முகாம் கட்டிடம் ஒன்று உள்ளது.
30 ஆண்டுகளாக ஆள் வசிக்காத நகரம்
1950 ஆண்டு Iberduero என்ற மின் உற்பத்தி நிறுவனமானது, சால்டோ டி காஸ்ட்ரோ கிராமத்திற்கு அருகில் உள்ள நீர்த்தேக்கத்தை கட்டும் ஊழியர்களுக்கான வீட்டு வசதி திட்டங்களை மேற்கொண்டது.
WIKIMEDIA COMMONS
ஆனால் வேலை முடிந்ததும் ஊழியர்கள் அனைவரும் கிராமத்தை விட்டு வெளியேறியதால், சால்டோ டி காஸ்ட்ரோ 1980 முதல் முழுமையாக கைவிடப்பட்டது.
சுற்றுலா தளமாக மாற்ற திட்டம்
மொத்த கிராமத்தையும் 2000ம் ஆண்டின் முற்பகுதியில் வாங்கிய நபர் ஒருவர், சால்டோ டி காஸ்ட்ரோ (Salto de Castro)என்ற முழு கிராமத்தையும் புணரமைத்து இதனை முக்கிய சுற்றுலா தளமாக மாற்ற திட்டமிட்டார்.
இருப்பினும் அந்த காலகட்டத்தில் ஐரோப்பிய பகுதியில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக சுற்றுலா தளமாக மாற்றும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
WIKIMEDIA COMMONS
மீண்டும் விற்பனை
போர்ச்சுகல் நாட்டின் எல்லைக்கு அருகில் ஜமோரா மாகாணத்தில் உள்ள சால்டோ டி காஸ்ட்ரோ என்ற கிராமம் ஸ்பெயினின் மாட்ரிட்டில் இருந்து மூன்று மணி நேர பயணத்தில் உள்ளது.
30 ஆண்டுகள் ஆள் வசிப்பு இல்லாத இந்த நகரம் தற்போது மீண்டும் சுமார் 227,000 யூரோக்களுக்கு(2.1 கோடி) விற்பனைக்கு வந்து இருப்பதாக பிபிசி அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக இந்த கிராமத்தின் உரிமையாளரை முன்னிறுத்தும் ராயல் இன்வெஸ்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ரோனி ரோட்ரிக்ஸ் பிபிசியிடம் அளித்துள்ள தகவலில், விற்பனைக்கு வந்துள்ள இந்த நகரத்தில் உரிமையாளர் மிகப்பெரிய ஓட்டலை கட்டியெழுப்ப திட்டமிட்டார் ஆனால் அது பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது, இருப்பினும் அந்த திட்டத்தை இன்னும் அவர் விருப்பமாக கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
இதனை வாங்குவதற்கு பிரித்தானியா, பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் ஆர்வம் காட்டி வருகின்றனர், இதற்கு ஒருவர் முன்பதிவு செய்வதற்காக பணத்தை வைத்து விட்டதாக ரோனி ரோட்ரிக்ஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.
விற்பனைக்கான காரணம்
மேலும் உரிமையாளர் இந்த கிராமத்தை விற்பதற்கான காரணத்தையும் ஸ்பானிஷ் சொத்து சில்லறை வலைத்தளமான Idealista இல் குறிப்பிட்டுள்ளது.
அதில் உரிமையாளர், நான் நகர்ப்புறவாசி என்பதால் என்னால் பரம்பரை அல்லது நன்கொடை சொத்தை கவனித்து கொள்ள முடியாமல் விற்கிறேன் என தெரிவித்துள்ளார்.
கிராமத்தை 100 சதவிகிதம் வேலை செய்ய வைக்க மற்றும் லாபம் ஈட்டுவதற்கு தேவையான முதலீடு 2 மில்லியன் யூரோக்களை தாண்டாது எனவும் விற்பனை வலைத்தளம் குறிப்பிட்டுள்ளது.