மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறது. மேலும் சிறுமியின் வீட்டில் தற்கொலை குறிப்புகளும் கிடைத்திருக்கின்றன. அதனடிப்படையில், சிறுமியின் சித்தி, மாமா, அத்தை, தாத்தா, பாட்டி ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்திருக்கின்றன. சிறுமியின் தந்தை அவரிடம், “நம் உறவினர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். அதனால் தற்கொலை செய்துக்கொள்வது போல, கடிதம் எழுதிக் கொடு” எனக் கூறியிருக்கிறார். சிறுமியும் அதே போல தன்கைப்பட தற்கொலை குறிப்பு எழுதியிருக்கிறார். பின்னர், “தற்கொலை செய்துகொள்வது போல புகைப்படம் எடுக்க வேண்டும்” எனக் கூறி, சிறுமி மின்விசிறியில் துணியை கழுத்தில் மாட்டியிருக்கும்போது ஸ்டூலை தள்ளிவிட்டு அவரைக் கொலைசெய்திருக்கிறார்.
அதைத் தொடர்ந்து தன்னுடைய மகள் தற்கொலை செய்து கொண்டது போல காட்டிக் கொண்டு, நாடகமாடியிருக்கிறார். இந்தக் கொலைச் சம்பவம் குறித்துப் பேசும் போலீஸார், “இறந்த சிறுமியின் தந்தை செல்போனிலிருந்த சில புகைப்படங்களை வைத்து சந்தேகத்தின் பேரில் அவரிடம் விசாரணை மேற்கொண்டோம். அதில் அவர், தன் மகளைக் கொலைசெய்தததை ஒப்புக்கொண்டார். கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்கின்றனர்.