திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் 2 நாட்களாக காத்திருக்கின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வார விடுமுறை நாளான நேற்றும், இன்றும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. நேற்று (சனி) 73,323 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 41.041 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.3.20கோடியை காணிக்கையாக செலுத்தினர். நேற்று தரிசனம் செய்யாத பக்தர்கள் இன்று 2வது நாளாக காத்திருக்கின்றனர். இதற்கிடையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை முதலே பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
இதனால் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிலா தோரணம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றனர். இவர்கள் சுமார் 40 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டி உள்ளது. ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.திருமலையில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர் மற்றும் லேசான சாரல் மழைக்கு இடையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதியில் நாளுக்குநாள் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கடந்த 1ம்தேதி முதல் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறது. அதேபோல் டிக்கெட் பெறாமல் நேரடியாக தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் சுவாமி தரிசனம் செய்ய இன்றும் சுமார் 40 மணி நேரம் ஆகிறது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.