மெல்போர்ன்: ஐ.சி.சி., ‘டி-20’ உலக சாம்பியன் பட்டத்தை இங்கிலாந்து அணி, இரண்டாவது முறையாக கைப்பற்றியது. பைனலில், 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது.
ஆஸ்திரேலியாவில், ‘டி-20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்தது. மெல்போர்னில் நடந்த பைனலில் பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
பாகிஸ்தான் அணிக்கு முகமது ரிஸ்வான் (15) சோபிக்கவில்லை. முகமது ஹரிஸ் (8) ஏமாற்றினார். கேப்டன் பாபர் ஆசம் (32), ஷான் மசூத் (38) ஓரளவு கைகொடுத்தனர். இப்திகார் அகமது (0), முகமது நவாஸ் (5), முகமது வாசிம் (4) நிலைக்கவில்லை. ஷதாப் கான் (20) ஆறுதல் தந்தார். பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 137 ரன் எடுத்தது. ஷஹீன் அப்ரிதி (5), ஹரிஸ் ராப் (1) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் சாம் கர்ரான் 3, அடில் ரஷித், ஜோர்டான் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
ஸ்டோக்ஸ் அபாரம்
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு அலெக்ஸ் ஹேல்ஸ் (1) ஏமாற்றினார். பில் சால்ட் (10) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய கேப்டன் பட்லர் (26), ஹாரி புரூக் (20), மொயீன் அலி (19) ஓரளவு கைகொடுத்தனர். அபாரமாக ஆடிய பென் ஸ்டோக்ஸ் அரைசதம் விளாசி வெற்றிக்கு கைகொடுத்தார்.
இங்கிலாந்து அணி 19 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 138 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்டோக்ஸ் (52), லிவிங்ஸ்டன் (1) அவுட்டாகாமல் இருந்தனர். பாகிஸ்தான் சார்பில் ஹாரிஸ் ராப் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதன்மூலம் இங்கிலாந்து அணி 2வது முறையாக ‘டி-20’ உலக கோப்பை வென்றது. இதற்கு முன், 2010ல் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதன்முறையாக கோப்பை வென்றிருந்தது. இதன்மூலம் அதிக முறை ‘டி-20’ உலக கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் முதலிடத்தை வெஸ்ட் இண்டீசுடன் (2012, 2016) பகிர்ந்து கொண்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement