ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 30 வயது இளைஞர், கடந்த 4-ம் தேதி இரவு தன் நண்பர்ளுடன் ஹோட்டலில் உணவருந்திக்கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த 5 பேர் அந்த இளைஞரை ஒரு காரில் இழுத்துச் சென்றிருக்கிறது. அந்த இளைஞரை தாக்கி மது அருந்தவைத்த அந்த 5 பேரும், தலைக்கேறிய போதையில் அவரை பாலியல்ரீதியாக துன்புறுத்தியிருக்கின்றனர்.
பின்னர், அந்த இளைஞரிடமிருந்த பணம், செல்போன் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்ட அந்தக் கும்பல், அவரை குருகிராம் மருத்துவமனைக்கு அருகில் இறக்கிவிட்டு தப்பியிருக்கிறது.
பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த நிலையில், மருத்துவமனை ஊழியர் அளித்த புகாரின்பேரில் காவல்துறை பாதிக்கப்பட்டவரிடம் விசாரித்திருக்கிறது. அப்போது, “நானும் அந்த 5 பேரும் கார் ஓட்டுநர்கள். அவர்களில் ஒருவரிடம் நான் ரூ.2 லட்சம் கடன் வாங்கியிருந்தேன். அதைத் தர தாமதமானதால், எனது காரை திருடிவிட்டு, என்னை பாலியல்ரீதியாக துன்புறுத்தினார்கள்” எனத் தெரிவித்திருக்கிறார்.
அதைத் தொடர்ந்து காவல்துறை குற்றம்சாட்டப்பட்ட 5 பேரையும் கைதுசெய்திருக்கிறது. அவர்கள்மீது பிரிவு 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 365 (கடத்தல்), 377 (இயற்கைக்கு மாறான குற்றங்கள்) மற்றும் 395 (கெடுபிடி) ஆகிய பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டது. மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.