சிம்லா: ஹிமாச்சல் பிரதேசத்தில், சட்டசபை தேர்தல் நேற்று அமைதியாக முறையில் நடந்தது. இந்நிலையில் ஓட்டுப்பதிவு எந்திரங்களை விதிமுறைகளை மீறி தனியார் காரில் எடுத்து சென்ற அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ஹிம்மாச்சல பிரதேச மாநிலத்தில் 68 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு நேற்று(நவ.,12) வாக்குப்பதிவு நடந்தது. தேர்தல் விதிமுறைகளின்படி, ஓட்டுப்பதிவு முடிந்ததும் ஓட்டுப்பதிவு எந்திரங்களை வாக்குச்சாவடியில் இருந்து ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையங்கள் வரை அரசு வாகனங்களில் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும்.
இந்நிலையில் 66 ராம்பூர் சட்டசபை தொகுதியில் உள்ள துத்நகர் 49க்கு வாக்குச்சாவடியில் நேற்று மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன், ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டன. அதன் பின், ஒரு தனியார் காரில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டன.
தொடர்ந்து காவல்துறை மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கும் காங்., எம்எல்ஏ நந்த் லால் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து காங்., மற்றும் பாஜ., முன்னிலையில், மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை அதிகாரிகள் சோதனை செய்து, அதில் முறைகேடு செய்யவில்லை என்பதை உறுதி செய்தனர்.
இது குறித்து துத்நகர் வாக்குச்சாவடி அதிகாரிகள் கூறுகையில், ‘ஓட்டுப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்ல வாக்குச்சாவடியில் இருந்த அலுவலர்கள் அவசரம் காட்டினர். இதன் காரணமாகவே தனியார் காரில் ஓட்டுப்பதிவு எந்திரங்களை கொண்டு சென்றனர்’ என்று தெரிவித்தனர்.
இதனையடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்ததாக காங்., கட்சியினர் போராட்டம் நடத்தியதால், தேர்தல் ஆணையம், வாக்குச்சாவடி உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்தது. மேலும், ஆறு வாக்குச்சாவடி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement