ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் பாஜக-வின் இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) அணியின் 3 நாள் பயிற்சி முகாமின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் அந்தக் கட்சியின் முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா பங்கேற்றார். முன்னதாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “மத்தியில் காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, 13-வது நிதிக்குழுவின் கீழ் தமிழகத்திற்கு 5 ஆண்டுகளில் ரூ. 62 ஆயிரம் கோடி நிதி கிடைத்தது. ஆனால், பிரதமர் மோடி பதவியேற்றபின்பு, 14-வது நிதிக்குழுவின்கீழ், ரூ.1,97,000 கோடி தமிழகத்திற்கு வந்துள்ளது. இதுபோல ஒவ்வொரு துறையிலும், காங்கிரஸ் – திமுக கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் தமிழகத்திற்கு கிடைத்த நிதியைவிட தற்போது கூடுதலான நிதி வழங்கப்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார். காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சிக்காலத்தில், உள்ளூர் மொழியுடன், ஆங்கிலம், இந்தி அல்லது சம்ஸ்கிருதம் கற்றுத் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தேசிய கல்விக் கொள்கையின்படி உள்ளூர் மொழி, ஆங்கிலத்துடன் ஏதாவது ஒரு இந்திய மொழி என்றுதான் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. எந்த காலத்திலும் இந்தித் திணிப்பு என்பது இந்த அரசிடம் இருக்காது.
தமிழகத்தில் 20 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர்கள். அதேபோல் கன்னடம், மலையாளத்தை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு, அவர்கள் தாய்மொழியில் கல்வி கற்றுக் கொடுப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? இதுதான் பன்முகத் தன்மை. இதனை பேணி காப்பதில் பாஜக அரசு உறுதியாக இருக்கிறது. வடமாநிலங்களில் மருத்துவம், பொறியியல் கல்வியை தாய்மொழியில் கற்றுத்தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல தமிழகத்திலும் மருத்துவம், பொறியியல் பாடத்தை தமிழில் கற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு பொறியியல் பாடம் தமிழில் அறிமுகம் செய்யப்பட்டபோது வெறும் 50 பேர்தான் தமிழில் படிக்க விருப்பம் தெரிவித்தனர். இதன் மூலம் தமிழக அரசு தமிழை வளர்க்க எந்த பணியையும் செய்யவில்லை என்பது நிரூபணம் ஆகியுள்ளது. எனவே, தமிழக அரசு தமிழைப்பற்றி பொய்யாக பேசிக்கொண்டு இருக்காமல், தமிழை உண்மையாக வளர்க்கத் தேவையான வேலைகளைச் செய்ய வேண்டும். எந்த ஒரு மொழியும் எழுத்திலும், படிக்கவும் பயன்படுத்தப்படாமல் வெறும் பேச்சுமொழியாக இருந்தால் அழிந்து விடும். அந்த வகையில் 55 ஆண்டு திராவிட ஆட்சியில் தமிழ் அழிந்து வருகிறது.
ஐ.நா.சபை, நாட்டின் எல்லைப் பகுதி உள்ளிட்ட எல்லா இடங்களிலும் தமிழின் பெருமையை பிரதமர் மோடி பேசி வருகிறார். அவரது தொகுதியிலுள்ள பனாராஸ் இந்து பல்கலைக் கழகத்தில், பாரதியார் பெயரில் ஓர் இருக்கையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். எங்கள் கொள்கை இருமொழிக் கொள்கை என்கின்றனர். ஆனால், தமிழகத்தில் 560 பள்ளிகள் மாற்றுமொழியை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய, நகர அளவில் மாநில அரசின் விவசாய மற்றும் நுகர்வோர் விரோத போக்கை கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மூன்று சதவிகித கொழுப்பு உள்ள பாலுக்கு, பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.3 வீதம் விலையை உயர்த்திவிட்டு, பால் விற்பனை விலையை ரூ.12 உயர்த்தியுள்ளனர். இதனால், டீ விலை ரூ.15 உயர்ந்துள்ளது. இது ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் செயல். பாலுக்கு ஜி.எஸ்.டி இல்லை என்பது பால்வளத்துறை அமைச்சருக்குத் தெரியவில்லை.
மந்திரிகள் எல்லாம் மக்கு மந்திரிகளாக உள்ளனர்.
சென்னை பத்திரிகையாளர் சந்திப்பின்போது, நேற்று அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயரிடம் ‘சும்மா அடிச்சு விடு’ என்று சொல்கிறார். கேவலமான, கீழ்த்தரமான மந்திரிகளாக உள்ளனர். திட்டப்பணிகளை சரியா பார்த்துச் சொல்லு என்று சொல்லாமல், அடிச்சு விடு என்கிறார்.
விவசாயிக்கு ரூ.3-ஐ உயர்த்தினால், நுகர்வோருக்கு ரூ.4 என உயர்த்தலாம். ஆனால், ரூ.12 ரூபாய் ஏற்றுகின்றனர். நான் 60 மாடுகளை வைத்து வளர்த்து வருகிறேன். அமைச்சர் நாசரை 6 மாதம் மாடு மேய்க்க வைத்துவிட்டு, அதில் லாபம் கிடைக்கிறதா என்று பார்க்கச் சொல்ல வேண்டும். கலைஞரும், ஜெயலலிதாவும் இல்லாததால் ஏற்பட்ட வெற்றிடத்தை நாம் வேகமாக செயல்பட்டு நிரப்பாமல் விட்டுவிட்டோம். ஆனால், இந்த அரசின் மீது தற்போது வெறுப்பு வரத் தொடங்கியுள்ளது. அதனால், ஏற்படும் வெற்றிடத்தை நாம் வேகமாக நிரப்ப வேண்டும். அதற்காக வேகமாக செயல்பட வேண்டும் என்று அமித் ஷா சொன்னார். இது ஓர் அரசியல் தலைவர், அவரது நிர்வாகிகளுக்கு வழிகாட்டும் வகையில் சொல்லப்பட்டது. இது விவாதத்திற்குரிய பொருள் அல்ல.
ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸுக்கு வெட்கம், மானம், ரோஷம் இருந்தால், திமுக கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும். 6 பேரும் விடுதலை செய்வதில் எங்களுக்கு உடன்பாடில்லை என்பதால் தான் பாஜக எந்த முடிவையும் எடுக்கவில்லை. எனவே நீதிமன்றம் எடுத்துள்ள இந்த முடிவை, நியாயமான தீர்ப்பாக நான் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழக ஆளுநர் சரியாகச் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார். தமிழகம் ஒரு எல்லைப்புற மாகாணம். இங்கு தேசவிரோத சக்திகள் ஊடுருவ வாய்ப்புள்ளது. தடைசெய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக மனிதச் சங்கிலி நடத்தப்படுகிறது. அதுபோன்ற தேசவிரோத, தீயசக்திகள் உள்ள நிலையில், இதுபற்றி அறிந்த ஒருவர் இங்கு கவர்னராக இருப்பது நல்லது. தவளை மாதிரி கத்தினாலும், ஜனாதிபதி அலுவலத்தில் மனு கொடுத்தாலும், ஆளுநரை மாற்றுவது என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. ஆளுநரை எதிர்ப்பவர்கள் தீயசக்திகள், தேச விரோதிகள். ஆங்கிலப் பிரபுக்கள் பற்றி பாடத்திட்டத்தில் உள்ளது. ஆனால், ராஜராஜ சோழன் குறித்து ஒரு பாடத்தில் கூட இல்லை. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?” என்றார்.
பேட்டியின் இறுதியில், ’நீங்க ஏன் ஆளுநர் பதவிக்கு முயற்சிக்கவில்லை’ என்று நாம் கேட்டதற்கு, “நான் எந்த பதவிக்கும் முயற்சி செய்யவில்லை” என்று சிரித்தபடியே கூறிச் சென்றார்.