கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் நீர் வரத்து வினாடிக்கு 5,212 கன அடியாக அதிகரித்துள்ளதால் தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.
குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக சூளகிரியில் 97 மி.மீ மழையும், அடுத்தபடியாக ஓசூரில் 62 மி.மீ. மழையும், கிருஷ்ணகிரியில் 49 மி.மீ. மழையும் பதிவானது. இதன் காரணமாக கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்தானது அதிகரித்துள்ளது.
இன்றைய காலை நிலவரப்படி நீர் வரத்து வினாடிக்கு 5,2121 கன அடியாக அதிகரித்துள்ளது . அணைக்க வரும் நீர் அப்படியே தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது . இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 50.40 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. அணையில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே வருவதால் அணையின் பாதுகாப்பை கருதி ஆற்றில் அதிகப்படியான நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றங்கரை மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றங்கரை மக்கள் யாரும் குளிக்கவோ, கால்நடைகளை மேய்க்கவும் ஆற்றுக்கு வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.