உத்தரபிரதேச மாநிலம் கஸ்கன்ச் மாவட்டம் நகலா தால் கிராமத்தை சேர்ந்தவர் 53 வயதான சுரேஷ் சந்திரா. இவர் ஹோம்கார்டாக பணியாற்றி வருகிறார். இவருக்கு சிறுநீரகத்தில் கல் இருந்ததால், கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி அலிகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 3 நாள்கள் மருத்துவமனை சிகிச்சைக்குப் பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 29 -ம் தேதி சுரேஷ் சந்திராவுக்கு அடிவயிற்றில் ஏற்பட்ட கடுமையான வலியால் துடிதுடித்துள்ளார். காஸ்கஞ்சில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பரிசோதனை செய்த மருத்துவர், இவரது வயிற்றில் உள்ள தையல் தழும்பை கண்டதும் சந்தேகமடைந்துள்ளார். இதனால் ஸ்கேன் செய்து பார்த்த போது, அல்ட்ராசவுண்ட் ரிப்போர்ட்டில் அவருக்கு இடதுபக்க சிறுநீரகம் எடுக்கப்பட்டது தெரியவந்தது.
சுரேஷ் சந்திரா சிறுநீரகம் காணமல் போனது குறித்து, சிகிச்சையளித்த தனியார் மருத்துவமனையில் விவரங்களை கேட்டுள்ளார். மழுப்பலாக பேசிய அவர்கள் சரியான பதிலை தரவில்லை என்பதால், மாவட்ட சுகாதார துறையில் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சுரேஷ் இதுகுறித்து கூறுகையில், “ஏப்ரல் 14-ம் தேதி அறுவை சிகிச்சைக்கு முன் அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்யப்பட்டது. அறிக்கையில் எனக்கு சிறுநீரக கல் இருப்பது கண்டறியப்பட்டது.
காஸ்கஞ்சில் உள்ள ஒரு தனியார் நோயறிதல் மையத்தின் பில்லிங் கவுன்டரில் இருந்த நபர், அலிகாரில் குவார்சி பைபாஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு என்னை பரிந்துரைத்தார். அதே நாளில், ஏப்ரல் 14 –ம் தேதியே என்னை அந்த மருத்துவமனையில் சேர்த்து அறுவை சிகிச்சை செய்தனர். அந்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் ஏப்ரல் 15-ம் தேதி அறுவை சிகிச்சை செய்யத் திட்டமிட்டுள்ளதாக கூறினார்கள். ஆனால், எனது உறவினர்கள் வரும் வரை அவர்கள் காத்திருக்கவில்லை. அதற்கு மறுத்துவிட்டு, ஒரு நாள் முன்னதாகவே அறுவை சிகிச்சை செய்தனர். நான் மயக்க நிலையில் இருந்ததால், என்னால் ஒன்றும் முடியவில்லை.
மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் எனது சிறுநீரகக் கல் அகற்றப்பட்டதாக கூறியதோடு, மருந்துகளின் பட்டியலைப் எழுதி கொடுத்தனர். ரூ. 28,000 பில்லை செலுத்தி நான் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கு முன்பு என் குடும்ப உறுப்பினர்களை கூட என்னைச் சந்திக்க அனுமதிக்கவில்லை. ஏப்ரல் 17-ம் தேதி என்னை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்தனர்.
அக்டோபர் 29 அன்று, எனக்கு அடிவயிற்றின் அடிப்பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டது. நான் காஸ்கஞ்சில் உள்ள ஒரு மருத்துவரை அணுகினேன், அவர் எனது முந்தைய நோய்க்கான மருத்துவ அறிக்கைகளைப் பார்த்தார். அத்துடன் என் வயிற்றின் இடது பக்கத்தில் நீண்ட அறுவை சிகிச்சை செய்த தையல் தழும்பை பற்றி கேட்டார்.
சந்தேகம் வரவே அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து பார்த்தேன். இடது சிறுநீரகம் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். தனியார் மருத்துவமனைக்கு போன் செய்தேன். அங்கு கல்லை அகற்றுவதாக கூறி என் சிறுநீரகத்தை டாக்டர்கள் திருடிச் சென்று விட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் ஹோம்கார்டு ஒருவரின் இடது சிறுநீரகம் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. அலிகாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கல் அகற்றும் அறுவை சிகிச்சை என்ற பெயரில் ஹோம்கார்டின் சிறுநீரகம் அகற்றப்பட்ட இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த தலைமை வளர்ச்சி அதிகாரி (சிடிஓ) உத்தரவிட்டுள்ளார்.