டெல்லி மாநகராட்சி தேர்தலில் தனக்கு சீட் கிடைக்காததால் டெல்லி முன்னாள் ஆம் ஆத்மி கவுன்சிலர் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி மாநகராட்சி தேர்தல் வரும் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பாஜக, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இதில் டெல்லியில் இப்போது ஆளும் கட்சியாக உள்ள ஆம் ஆத்மி, உள்ளாட்சித் தேர்தலிலும் அமோக வெற்றியை அறுவடை செய்யும் முனைப்பில் தீவிரமாக களமிறங்கியுள்ளது. இதையொட்டி ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் 250 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி மாநகராட்சி தேர்தலுக்குக் கடந்த வெள்ளிக்கிழமை முதற்கட்டமாக 134 வேட்பாளர்களைக் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டார். மறுநாளே, சனிக்கிழமை 117 வேட்பாளர்களைக் கொண்ட இரண்டாவது பட்டியலை வெளியிட்டார்.
இந்நிலையில் வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இடம்பெறாததால் டெல்லி முன்னாள் ஆம் ஆத்மி கவுன்சிலர் ஹசீப்-உல்-ஹசன் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு சீட் கிடைக்காத அதிருப்தியில் ஹசீப்-உல்-ஹசன் சாஸ்திரி, பார்க் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில், தீயணைப்புத் துறையினரும், காவல்துறையினரும் விரைந்து வந்து அவரை சமாதானம் செய்து கீழே அழைத்து வரும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிக்கலாமே: விட்டுச்சென்ற கணவன்.. மகனுக்காக தடைகளை உடைத்த தாய்.. இது போபால் பெண் டிரைவரின் கதை!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM