ஈபிஎஸ் பிடிவாதம்… அண்ணாமலை மறைமுக எச்சரிக்கை..!

நேற்று திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழக 36 ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழாவிற்கு பிரதர் மோடி வருகை தந்தார். அதேபோல நேற்று இரவு உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வந்திருந்தார். இந்த நிகழ்வு அரசியலாகவும் பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சிகளுக்கு பிறகு சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பேட்டியளித்த அண்ணாமலை கூறிய தகவல்கள் எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுக எச்சரிக்கை என்றும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுகள் பாஜகவுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக அதன் உள்கட்சி விவகாரத்தால் வேகம் காட்ட முடியவில்லை. அந்த இடத்தை பாஜக லாவகமாக பயன்படுத்திக்கொண்டு திமுகவா – பாஜகவா என்ற நிலைப்பாட்டை உருவாக்கிக்கொண்டது. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக, அதிமுகவை ஒன்றுபடுத்தி பாஜக தலைமையில் கூட்டணி அமைக்க டெல்லி மேலிடம் வியூகம் வகுத்து வருகிறது. இதில், ஈபிஎஸ்-க்கு சுத்தமாக உடன்பாடு இல்லை.

அதிமுக தலைமையில் தான் கூட்டணி, கட்சியில் ஓபிஎஸ், சசிகலா, டிடிவிக்கு இடமே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி பிடிவாதம் காட்டி வருவதாகவே பாஜக அதிருப்தி அடைந்துள்ளது. பேச்சு வார்த்தை வேலைக்கு ஆகவில்லை என்றால் வேறு வழியை தான் கையாளவேண்டும் என்று பாஜக நினைத்தால் அதற்கு தலைவர்களை இழுப்பதும், சின்னத்தை முடக்குவதும் தான் ஒரே வழியாம். அந்த வகையில் நேற்று அண்ணாமலை குறிப்பிட்ட சில வார்த்தைகள் அதிமுகவுக்கு மறைமுக எச்சரிக்கை என்கின்றனர்.

அண்ணாமலை பேசியபோது, ” திமுகவுடன் தேர்தல் களத்தை எதிர்த்து சந்திக்க பாஜக தயாராக உள்ளது. முக்கிய தலைவர்கள் சேர வேண்டும் என காத்துக்கொண்டிருப்பதாக டெல்லி மேலிடத்துக்கு அழைப்புகள் வருகிறது. அதற்கான நேரம் வரும். மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து எங்கள் பாராளுமன்ற குழு பேசி முடிவெடுக்கும்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஈபிஎஸ் மீது அதிருப்தி அடைந்தவர்கள் அந்த லிஸ்டில் இருக்கலாம் என்றும் பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.