திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே துரிஞ்சலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சம்மந்தனூர் தரைப்பாலம் மூழ்கியதால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அடுத்த சம்மந்தனூர் கிராமத்தில் துரிஞ்சலாற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. பள்ளிகொண்டாப்பட்டு – சம்மந்தனூர் இடையே இருக்கும் இந்த தரைப்பாலத்தை கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், திருவண்ணாமலை மற்றும் சுற்று பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழையால், துரிஞ்சாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் சம்மந்தனூர் கிராமத்தில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் சம்மந்தனூர், நல்லவன்பாளையம், பொலக்குணம் உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 5 கி.மீ., சுற்றி வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. துரிஞ்சலாற்றில் வெள்ள பெருக்கு அதிகரிக்கும் என்பதால், தரைப்பாலத்தை கடந்து செல்ல வேண்டாம் என நெடுஞ்சாலைத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறும்போது, “ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்யும்போது, துரிஞ்சலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, தரைப்பாலம் மூழ்கிவிடுவது வாடிக்கையாக உள்ளது. இதனால், 8 கி.மீ., தொலைவுக்கு சுற்றி வர வேண்டிய நிலை ஏற்படுகிறது. பள்ளிகொண்டாப்பட்டு பள்ளியில் படிக்கும் மாணவர்கள், தரைப்பாலத்தை கடந்துதான் செல்ல வேண்டும். தரைப்பாலம் மூழ்கி உள்ளதால் மாணவர்களுக்கும் பாதிப்பு. தரைப்பாலத்தை அகற்றிவிட்டு உயர்மட்ட பாலம் கட்டிக் கொடுக்க கோரிக்கை விடுத்தும் பலனில்லை. எங்கள் கோரிக்கையை நிறைவேற்றி கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.