ஏரல்: ஏரல், பெருங்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. ஸ்ரீவைகுண்டம் அருகே காடுவெட்டியில் இருந்து சிவராமங்கலம், பொட்டல், மாங்கொட்டாபுரம், பெருங்குளம், மங்கலகுறிச்சி வரை சுமார் 1500 ஏக்கரில் வாழை, நெல் பயிரிடப்படுகிறது. விளைநிலத்தில் உள்ள உபரிநீர் வடியவும், மழை காலத்தில் வரும் தண்ணீரை வெளியேற்றுவதற்கும் வயல் பகுதியில் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் வயல்களில் தேங்கும் உபரிநீரை வெளியேற்றி வருகின்றனர். இந்த வடிகாலில் வரும் தண்ணீர் காடுவெட்டியில் தொடங்கி சிவராமங்கலம், பொட்டல், மாங்கொட்டாபுரம், பெருங்குளம், மங்கலகுறிச்சி, ஆத்தாம்பழம் வடிமடை வழியாக தாமிரபரணி ஆற்றுக்குள் செல்கிறது.
கடந்தாண்டு பெய்த மழையின் போது வடிகாலில் ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகளால் தண்ணீர் வெளியேறுவது தடைப்பட்டு, வயலுக்குள் புகுந்து அங்கு பயிரிட்டிருந்த வாழை, நெல் நீரில் மூழ்கி பலத்த சேதமடைந்தது. இதனால் விவசாயிகள் பெரிய இழப்பை சந்திக்க நேர்ந்தது. இதையடுத்து அரசு நடவடிக்கை எடுத்து நிவாரணம் வழங்கியது.
தற்போது முன்னெச்சரிக்கையாக காடுவெட்டியில் இருந்து மாங்கொட்டாபுரம் வரை வடிகாலில் தூர் வாரப்பட்டுள்ளது. ஆனால் அதன்பிறகு பெருங்குளம், மங்கலகுறிச்சி, ஆத்தாம்பழம் வடிமடை வரையிலான வாய்க்கால் தூர்வாராமல் உள்ளது. எனவே அப்பகுதியில் அரசு தூர்வாரிட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், இந்த ஆண்டு வடிகால் சமீபத்தில் தூர் வாரப்பட்ட நிலையில் மாங்கொட்டாபுரத்தில் இருந்து பெருங்குளம், மங்கலகுறிச்சி வழியாக ஆத்தாம்பழம் வடிமடை வரை கடைசி வாய்க்கால் தூர்வாராமல் உள்ளது. இதனால் வடிகாலில் வரும் தண்ணீர் இப்பகுதியில் செடி, கொடிகள் ஆக்கிரமிப்பால் வாய்க்காலில் செல்ல வழியின்றி தண்ணீர் வயலுக்குள் புகுந்து அங்கு பயிரிட்டுள்ள வாழையை சூழ்ந்து வருகிறது.
இன்னும் பலத்த மழை பெய்யாத நிலையில் தண்ணீர் வடியாமல் உள்ளது. இனி பலத்த மழை பெய்தால் பெருங்குளம், மங்கலகுறிச்சி பகுதியில் பயிரிடப்பட்ட வாழைகள் முற்றிலும் சேதமடைந்து விடும். எனவே கடந்த ஆண்டு போல விவசாய பயிர்கள் அழியாமல் பாதுகாக்க மாங்கொட்டாபுரத்தில் இருந்து ஆத்தாம்பழம் வரையுள்ள வாய்க்காலை உடன் தூர்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.