இடைப்பாடி: சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், இடைப்பாடி தாலுகாவை சுற்றியுள்ள ஏரி, குளங்கள் தொடர்ந்து நிரம்பி வழிகிறது. கொங்கணாபுரம் அடுத்த எருமைப்பட்டி ஊராட்சியில் 43 ஏக்கர் பரப்பளவில் உள்ள புது ஏரி 72 ஆண்டுகளுக்கு பின்பு நிரம்பி உபரிநீர் வெளியேறியது. தொடர் மழையினால் வைகுந்தம், வெள்ளையம்பாளையம், மாங்குட்டபட்டி, பாலப்பட்டி, கொல்லப்பட்டி, கன்னந்தேரி ஆகிய ஏரிகள் நிரம்பிய நிலையில் நேற்று முன்தினம் இரவு கொங்கணாபுரம் புது ஏரியும் நிரம்பியது. இதனால், மகிழ்ச்சியடைந்த கிராம மக்கள் மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர்.
மேலும், சங்ககிரி ஆர்டிஓ சௌமியா, தாசில்தார் லெனின், திமுக மாவட்ட துணைச் செயலாளர் சம்பத்குமார், ஒன்றிய செயலாளர் பரமசிவம், பேரூர் செயலாளர் அர்த்தநாரீஸ்வரன், கொங்கணாபுரம் பேரூராட்சி தலைவர் சுந்தரம், எருமப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பழனிசாமி, பிடிஓ கௌரி, செயல் அலுவலர் மோசஸ் ஆண்டனி மற்றும் பொதுமக்கள் மலர் தூவியும், கிடா வெட்டியும் தண்ணீரை வரவேற்றனர். தண்ணீர் செல்லும் பகுதிகளில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியில், கொங்கணாபுரம் பேரூராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.