நிவாரண முகாம்களில் 16 ஆயிரம் பேர் தங்கவைப்பு, 45,826 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கின: தமிழக அரசு

சென்னை: மயிலாடுதுறை மாவட்டத்தில் 16 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், 45,826 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளதாகவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை மற்றும் பாதிப்புகள் குறித்த கண்காணிப்பு பணிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இன்று (நவ.13) மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இது தொடர்பாக பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,”தமிழகத்தில் நேற்று (நவ.12) 37 மாவட்டங்களில் 19.14 மி.மீ. மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 68.17 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் சராசரியாக 47.01 மி.மீ. மழை பெய்துள்ளது.சென்னையில் 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 954 நீர் இறைப்பான்கள் தயாராக உள்ளன. தற்போது, மழை நீரை வெளியேற்ற 447 நீர் இறைப்பான்களும், 13 JCB- களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

12ம் தேதி அன்று சேலம் மாவட்டத்தில் 1 மனித உயிரிழப்பும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 1 மனித உயிரிழப்பும் ஆக மொத்தம் 2 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இறந்த நபர்களது குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 83 கால்நடை இறப்புகள் பதிவாகியுள்ளன. 538 குடிசைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன. கால்நடை இறப்பு மற்றும் சேதமடைந்த வீடுகள், குடிசைகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மயிலாடுதுறை, கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், தேனி, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 38 நிவாரண மையங்களில் 7,232 குடும்பங்களைச் சேர்ந்த 16,807 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 7,156 கும்பங்களைச் சேர்ந்த 16,577 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தேடல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களுக்கு தலா 1 குழு வீதம் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 70 வீரர்களைக் கொண்ட 3 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், கடலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை மாவட்டங்களில் 163 வீரர்களைக் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 5 குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில், சுமார் 45,826 ஹெக்டேர் நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளது. இதனை விரைவில் வடியவைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில், தற்போது மழை நீர் விரைந்து வடிந்து வருகிறது. கனமழை காரணமாக ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க அனைத்துத் துறை அலுவலர்களும் கள அளவில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில், மின் விநியோகத்தை உடனடியாக சீரமைக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் ஒரு தலைமைப் பொறியாளர், 2 கண்காணிப்பு பொறியாளர்கள், 4 செயற் பொறியாளர்கள் மற்றும் 150 பணியாளர்கள் அருகில் உள்ள மாவட்டங்களிலிருந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், ஓதவந்தான்குடி கிராமம் வழியாக செல்லும் புதுமண்ணியாற்றின் வலது கரையில் ஏற்பட்ட உடைப்பு உடனடியாக சீரமைக்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மீட்புப் படை 1,149 பேரும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை 899 பேரும் தயார் நிலையில் உள்ளனர். 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5,093 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன. இதுவரை 1070 கட்டணமில்லாத தொலைபேசி மூலமாக 655 புகார்கள் வந்துள்ளன. இதில் 473 புகார்கள் சரிசெய்யப்பட்டுள்ளன. 182 தொலைபேசி அழைப்புகளை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியில் 20.50 அடிக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. தற்போது செம்பரம்பாக்கத்திற்கு 2187 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 1,156 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. புழல் ஏரியில் 18.92 அடி தண்ணீர் உள்ளது. 756 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 677 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. நீர்த்தேக்கங்களிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.