புதுச்சேரி: சங்கரதாஸ் சுவாமிகளின் 100வது ஆண்டு நினைவு நாளையொட்டி புதுச்சேரியில் நாடகக்கலைஞர்கள் சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தில் நடிகர் விஜய் ஆண்டனி கலந்துகொண்டு சாலையில் நடனமாடி உற்சாகப்படுத்தினார்.
புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத் துறை மற்றும் தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் சார்பில் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் 100வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. புதுச்சேரி கலை, இலக்கிய பெருமன்றம் சார்பில் ஈஸ்வரன் கோவிலில் இருந்து கருவடிக்குப்பம் வரை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சங்கரதாஸ் சுவாமிகளின் படத்தை ஏந்தி நாடகக் கலைஞர்கள் ஊர்வலமாகச் சென்றார்.
இந்த பேரணியில் புதுச்சேரி நாடக் கலைஞர்கள், பொதுநலக் கூட்டமைப்பினர், புதுச்சேரி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தினர், புதுச்சேரி நாடகக் குழுக்கள், தமிழர் பாரம்பரிய கலைக்குழுவினர், மக்கள் கலைக்கழக தெருக்கூத்து கலைஞர்கள், சிவகான பூதகான இசைக்குழு மற்றும் திண்டுக்கல் கரூர் மன்னார்குடி மணப்பாறை நாடக நடிகர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தில் நடிகர் விஜய் ஆண்டனி கலந்துகொண்டு நாடகக் கலைஞர்களுடன் இணைந்து நடனமாடினார். தொடர்ந்து கருவடிக்குப்பத்தில் இடுகாட்டில் உள்ள சங்கரதாஸ் ஸ்வாமிகளின் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு கலை, இலக்கிய பெருமன்றத்தினர் மற்றும் நாடகக் கலைஞர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, சங்கரதாஸ் சுவாமிகள் நினைவிடத்திற்கு வந்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.