சிதம்பரம்: சிதம்பரம் பேருந்து நிலையத்தில் சென்னை பஸ் தீப்பிடித் துஎரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் இருந்து மாயவரம் செல்லும் பஸ் நேற்று இரவு 9.15 மணியளவில் சிதம்பரம் பேருந்து நிலையத்திற்கு வந்தது. அப்போது திடீரென பின்பக்க டயர் வெடித்து தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென பரவி பஸ் முழுவதும் எரியத்தொடங்கியது. இதனால், அதிர்ச்சியடைந்த ஓட்டுனர் செல்வம், நடத்துனர் முரளி பயணிகளை உடனடியாக இறக்கி விட்டனர்.
இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தீப்பிடித்த பேருந்தின் அருகே சில தனியார் பேருந்துகள் நின்றிருந்தது. அவற்றை அதன் டிரைவர்கள் ஓட்டி சென்று வேறு இடத்தில் நிறுத்தினர். பஸ் தீப்பிடித்து எரிந்ததை பார்த்த கீழே இருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த சிதம்பரம் தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர். எனினும் பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.