சென்னை: தமிழக அரசு 12 ஆண்டுகளுக்கு முன்பே பொறியியல் கல்வியை தமிழில் அறிமுகம் செய்துவிட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பதில் அளித்துள்ளார்.
மருத்துவம், பொறியியல் படிப்புகளில் பயிற்று மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னையில் நேற்று (நவ.12) நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். இதற்கு தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பதில் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்மொழி மிகவும் தொன்மையானது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த மொழியின் அருமையைத் தெரிந்து கொள்ளக்கூடிய வகையில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் தமிழ்வழியில் பாடத் திட்டங்களைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னையில் நேற்று நடைபெற்ற “இந்தியா சிமென்ட்ஸ்” நிறுவனத்தின் பவள விழாவில் பேசியிருக்கிறார்.
அன்னைத் தமிழ் மொழி மீது உள்துறை அமைச்சருக்கு ஏற்பட்டுள்ள ஆர்வத்திற்கும் அக்கறைக்கும் முதலில் தமிழக மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் எங்கள் தாய்மொழி; எங்கள் உயிரோடும் உணர்வோடும் கலந்த மொழி. ஆகவே திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பிற்கு வருகின்ற காலத்தில் எல்லாம் தமிழ்மொழியை அரியணையில் அமர வைத்து அழகு பார்ப்பதுதான் பேரறிஞர் அண்ணா, கருணாநிதி வழியில் ஆட்சி நடத்தும் எங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையாய பணி.
ஆகவே, தமிழ்மொழிக் கல்விக்காகத் திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆற்றிய பணிகள் சிலவற்றை உள்துறை அமைச்சருக்கு நினைவூட்டிட விரும்புகிறேன். இந்திய ஆட்சிப் பணித் தேர்வுகளை தமிழில் எழுதினால் அதிகம் பேர் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்பதற்காக, 1997-2001-இல் தமிழ்மொழி, இலக்கியம், புவியியல், வரலாறு போன்ற பாடங்கள் தமிழில் தனித்தனியே தொகுத்து வெளியிட முடிவு எடுக்கப்பட்டு, முதல் முயற்சியாக தமிழ்மொழி வரலாறு வெளியிடப்பட்டது. பள்ளிப்படிப்பில் 10ம் வகுப்பு வரை அனைவருக்கும் தமிழ் கட்டாயப்பாடம் எனத் திராவிட முன்னேற்றக் கழக அரசில்தான் சட்டமியற்றி, அந்தச் சட்டத்தை உச்சநீதிமன்றம் வரை அங்கீகரித்தது.
கல்லூரிகளில் தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் நிதியுதவி அளிக்கும் திட்டம் திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த 1967-68-இல் அறிவிக்கப்பட்டு, அது படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது ஆண்டிற்குத் தமிழ்வழியில் பயிலும் ஒரு மாணவருக்கு 900 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டமும் கழக அரசின் திட்டம்தான்!
உள்துறை அமைச்சர், இப்போது சுட்டிக்காட்டியுள்ள பொறியியல் பட்டப்படிப்பை முதன்முதலில் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, 2010-ஆம் ஆண்டே அறிமுகப்படுத்தி விட்டார். இந்தியாவிலேயே முதல் மாநிலமாக பொறியியல் படிப்பினைத் தாய்மொழியில் கற்க ஏற்பாடு செய்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் கட்டட (சிவில்) மற்றும் இயந்திரப் (மெக்கானிக்கல்) பொறியியல் படிப்புகளைத் தமிழில் அறிமுகம் செய்து, தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட தமிழில் பொறியியல் கல்வி இன்றும் நடைமுறையில் உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளிலும் தமிழில் பொறியியல் படிப்பு நடைமுறையில் உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழில் பொறியியல் கல்வி படித்து பி.இ., பட்டம் பெற்ற தமிழக இளைஞர்கள் இன்றைக்குப் பொதுப்பணித்துறை, வீட்டுவசதி வாரியம், மெட்ரோ ரயில் திட்டம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் போன்ற பல துறைகளில் பொறியாளர்களாகவும், பல பன்னாட்டு நிறுவனங்களின் உயர்பதவிகளை அலங்கரிப்பவர்களாகவும் பணியாற்றி வருகிறார்கள். ஏன், அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழியில் பொறியியல் படிப்பில் பட்டம் பெற்ற ஐஸ்வர்யா தான் 2020ம் ஆண்டு குடிமைப் பணித் தேர்வில் (IAS) வெற்றி பெற்றுள்ளார்.
இதன் அடுத்தகட்டமாக, இப்போது 2022-23ம் ஆண்டு முதல் பட்டயப் படிப்புகளிலும் மேற்கண்ட பாடப்பிரிவுகள் தமிழ்வழியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் தொடங்கப்பட்டுள்ளன. அதற்காகப் பொறியியல் பட்டப் படிப்பிற்கான புத்தகங்கள் தமிழ்வழியில் வெளியிடப்பட்டுள்ளன. பொறியியல் பட்டப் படிப்பு சிவில், மெக்கானிக்கல் என்பதையும் தாண்டி, கணினி அறிவியல் பிரிவிலும் தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழர் மரபும், தமிழரும் தொழில்நுட்பமும் நடப்பாண்டில் பொறியியல் கல்லூரிகளில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
12 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்வழியில் பொறியியல் கல்வி தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு விட்டாலும், மருத்துவப் படிப்பு, அதாவது எம்.பி.பி.எஸ் தமிழில் கற்பதற்கும் வழி செய்யவும் இப்போது தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக மூன்று பேராசிரியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, எம்.பி.பி.எஸ் முதலாண்டு பாடப் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்கள் அன்னைத் தமிழ்மீது காட்டியுள்ள அக்கறையோடு, சமஸ்கிருதத்திற்கு இணையாக உயர்தனிச் செம்மொழியாம் தமிழின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசின் நிதியுதவி அளித்திடவும்; உள்துறை அமைச்சரே ஒப்புக் கொண்டிருப்பது போல், தொன்மை வாய்ந்த தமிழ் மொழிக்கு உரிய ஆட்சி மொழித் தகுதியை ஒன்றிய அரசு அலுவலகங்களில் அளித்திடவும் தேவையான முயற்சிகளை எடுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
குறிப்பாகத் தமிழகத்தில் ஒன்றிய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கட்டாயத் தமிழ் பாடத்திட்டத்தை அமல்படுத்தவும், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக காலியாக உள்ள தமிழ்ப் பேராசிரியர் பணியிடங்களை உடனே நிரப்பித் தர வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.