திருமலை: தெலங்கானாவில் கல்லூரி விடுதியில் புகுந்து மத உணர்வை புண்படுத்தி சட்ட மாணவரை தாக்கி, ராக்கிங் செய்த சீனியர் மாணவர்கள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த வழக்கில் போலீசார் 5 மாணவர்களை கைது செய்த நிலையில், மற்றவர்கள் தலைமறைவாகி விட்டனர்.தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள (பவுண்டேஷன் பார் ஹையர் எஜுகேஷன் (ICFAI)) தனியார் கல்லூரியில், ஹிமாங்க் பன்சால் என்ற மாணவர் பிஏ எல்எல்பி முதலாமாண்டு படிக்கிறார்.
இதே கல்லூரியில் 3ம் ஆண்டு பிசினஸ் மேனேஜ்மென்ட் படிக்கும் சீனியர் மாணவர்கள், ஹிமாங்க் பன்சாலின் அறையில் புகுந்து கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரை அடித்து மிரட்டும் மாணவர்கள், குறிப்பிட்ட கடவுளின் பெயரை சொல்லும்படி வற்புறுத்தி உள்ளனர். இது பற்றி பன்சால் அளித்த புகாரின்பேரில், சைபராபாத் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் நேற்று முன்தினம் 12 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 7 பேரை தேடி வருகின்றனர். இதற்கிடையில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள 12 மாணவர்களை கல்லூரியில் இருந்து ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.