சென்னை: மாநில கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை 6 மாதங்களில் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வு பெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாநிலக் கல்விக் கொள்கை வடிவமைப்பு தொடர்பான பணிகளில் நீதிபதி முருகேசன் குழுவினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தமிழகத்தை சென்னை உட்பட 8 மண்டலங்களாக பிரித்து, கல்வியாளர்கள், பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பின் கருத்துகளை அறிவதற்காக கடந்த 2 மாதங்களாக பல்வேறு இடங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
அதில் தமிழ்வழி கல்விக்கு முன்னுரிமை, விளையாட்டு, கலை செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம், பாடத்திட்டம் குறைப்பு, ஆசிரியர் பயிற்சியை மேம்படுத்துதல், அரசு, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வயது நிர்ணயத்தில் ஒரே நடைமுறையை கையாளுதல், போதைப் பழக்கத்தில் இருந்து மாணவர்களை மீட்க நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, மாநில கல்விக் கொள்கை தயாரிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும், வரைவு அறிக்கை 6 மாதங்களில் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.