இந்த எபிசோடில் தனலஷ்மிக்கு கமல் தந்தது அதிர்ச்சி மட்டுமல்ல, அதிர்ச்சி வைத்தியமும் கூட. கோடிக்கணக்கான ஊழலைப் போய் ஒரு விளையாட்டில் நிகழ்ந்த சிறிய தவறோடு ஒப்பிடுவது மிகையல்லவா?’ என்று கேள்வி எழலாம். வருங்காலத்தில் விளையாட்டுக்குக் கூட ஊழல் நடைபெறக்கூடாது என்பது இளையதலைமுறையினருக்கு இவ்வாறுதான் கறாராக கற்பிக்கப்பட்டாக வேண்டும்.
தானே அதற்கு முன்னுதாரணமாக இருப்பதாக கமல் சொல்வது பாராட்டப்பட வேண்டியது. செயலில் நேர்மை இல்லாமல் சொல்லில் இத்தனை துணிச்சலும் தெளிவும் வராது. மகேஸ்வரியை விடவும் சுமாரான போட்டியாளர்கள் அங்கு நீடிக்க, அவர் வெளியேறியது வழக்கம் போல் ஒருவகையான துரதிர்ஷ்டம்தான்.
நாள் 35-ல் நடந்தது என்ன?
கமல் விசாரணை நிகழ்வுகளால் சோர்வடைந்து உட்கார்ந்திருந்த தனலஷ்மியிடம் ‘ஃபீல் பண்ணாத’ என்று மணிகண்டன் ஆறுதல் சொல்ல, “நீ உன் கேரக்ட்டரை மாத்திக்க வேணாம். ஃபிஹேவியர் மாத்தினா போதும்” என்று ஆயிஷா சொன்ன உபதேசம் நன்று. “நான் நெறய இடத்துல கோபத்தைக் குறைச்சிருக்கேன்” என்று முனகினார் தனலஷ்மி. (குறைச்சதே இவ்வளவு எஃபெக்ட்டா?!).
எவ்வித எக்ஸ்ட்ரா பிட்டிங்குகளும் இல்லாமல் நேர்த்தியான கிரே நிற உடையில் மந்தகாசமான புன்னகையுடன் அரங்கிற்குள் நுழைந்தார் கமல். “எப்படியாவது வெற்றியை அடைய வேண்டும் என்பது இளையதலைமுறையினரின் மனப்பாங்காக மாறி விட்டதோ?! எனில் அந்த வெற்றி என்னும் பொய்யை வாழ்நாள் முழுக்க சுமக்க வேண்டும். அதை உள்ளூற அனுபவிக்க முடியாது. வெற்றியில் அறம் வேண்டும்” என்கிற முன்னுரையுடன் வீட்டிற்குள் நுழைந்தார்.
‘பச்சை முத்திரை, சிவப்பு முத்திரை விளையாட்டு’
“சார்.. செமயா இருக்கீங்க.. உங்க டிரஸ் நல்லாயிருக்கு” போன்ற பரஸ்பர முகஸ்துதிக் காட்சிகள் எல்லாம் இப்போது வருவதில்லை. நேரடியாக வேலையில் இறங்கி விடுகிறார் கமல். ஆரம்பமே ஒரு வில்லங்கமான டாஸ்க். ‘இவர் கூட இருந்தா எனக்கு சிறப்பா இருக்கும் மற்றும் ‘இவர் கூட சேர்ந்தா.. அவ்வளவுதான். உள்ளதும் போயிடும்’ என்கிற நோக்கில் தலா ஒரு நபரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
‘இவர் செம பிளேயர்’ என்றால் பச்சை முத்திரை. ‘இந்தாளு சகவாசமே வேணாம்ப்பா’ என்றால் சிவப்பு முத்திரை. இதற்காக போட்டியாளர்களின் புகைப்படங்கள் அடங்கிய பலகை ஒன்று தயாராக இருந்தது. இந்த டாஸ்க்கில் ஷிவினுக்கு அமோக வரவேற்பு இருந்தது. ‘ரோல் மாடல்’ என்று பலரால் சொல்லப்பட்ட போது ‘ஐயோ. எனக்கே ஓவரா இருக்கே’ என்று உச்சி குளிர்ந்தார் ஷிவின். இதற்கு அவர் தகுதியானவர்தான். ஆரம்ப நாட்களில் அலங்காரம், கோபம், தனிமை போன்றவற்றில் மட்டுமே கவனம் செலுத்திய ஷிவின், இப்போது அந்த வீட்டிற்கேற்ப பொருந்தி மாறி வருகிறார்.
அதிக எண்ணிக்கையிலான சிவப்பைப் பெற்றவர் அசிம் “சிவப்பு குத்தினவங்களுக்கு நன்றி. நான் ஆடற ஸ்டைல் புரியலைன்னு சொன்னாங்க. அதுதான் எனக்கு வேணும். கடைசி வரைக்கும் தனியாத்தான் விளையாடுவேன். நட்பெல்லாம் வெளிய தொடர்வேன்” என்று வித்தியாசமாக விளக்கம் அளித்த அசிமிடம் “உங்க நண்பர்கள் கூட பச்சை குத்தலை பார்த்தீங்களா?” என்கிற கேள்வியின் மூலம் ஊசி குத்தினார் கமல்.
அசிமிற்கு அடுத்தபடியாக வந்தவர் தனலஷ்மி. “எதையும் நேரா சொல்லிடுவேன். அவங்க செய்யறது கரெக்ட்டுன்னு சொல்லணும்ன்னு எதிர்பார்க்கறாங்க போல” என்பது அவர் விளக்கம். “பச்சை, சிவப்பு வாங்கினவங்க இருக்கட்டும். எதையுமே வாங்காதவங்க யோசியுங்க” என்று இன்னொரு ஊசியை மற்றவர்களுக்கு இறக்கி விட்டு பிரேக்கில் சென்றார் கமல்.
மறுபடியும் அதேதான். தனலஷ்மியின் கோபம் சகஹவுஸ்மேட்ஸ்களால் சுட்டிக் காட்டப்பட்டது, பார்வையாளர்கள் அதற்கு கைத்தட்டியது… போன்ற நிகழ்வுகளால் நொந்து போன தனலஷ்மி, மீண்டும் காமிரா முன் சென்று “என்னை வெளில அனுப்பிடுங்க.. என்னை மாத்திக்க நான் இங்க வரலை. நான் நானத்தான் இருப்பேன்.. ஒரு மாதிரி பேசறாங்க..” என்று வேண்டுகோள் வைத்தார். அந்தப் பக்கம் கடந்து போன கதிரவன் ‘மறுபடியும் முதல்ல இருந்தா?’ என்று ஜாலியாக கமெண்ட் செய்து விட்டுப் போனார்.
‘உங்கள் வெற்றியில் நியாயம் இல்லை’ – கமல் ஆவேசம்
பிரேக் முடிந்து திரும்பிய கமல் “முயற்சியை மதிப்பவர்களை மக்களும் ஆதரிப்பார்கள். ஆயிஷா நீங்கள் காப்பாற்றப்பட்டீர்கள்” என்று சொல்லி விட்டு இலவச இணைப்பாக ஏடிகே காப்பாற்றப்பட்டதையும் கூடவே சொன்னார்.
அடுத்ததாக ‘வெற்றி பெற்ற முதலாளி’ தனலஷ்மியை சர்காஸ்டிக்காக பாராட்டினார் கமல். அப்போதாவது தனலஷ்மி உஷாராகி இருக்க வேண்டும். ‘கஷ்டப்பட்டு பெற்ற வெற்றி’ என்று ஊசியை இன்னமும் இறக்கிய போதாவது விழித்துக் கொண்டிருக்க வேண்டும். உதட்டோரத்தில் ஒரு சங்கடப் புன்னகை மட்டும் தன்னிச்சையாக வந்தது. அதுவே கள்ளத்தின் அறிகுறி. ஸ்வீட் டாஸ்க்கில் தனலஷ்மி செய்த குளறுபடியை ‘குறும்படத்தின்’ மூலம் வெளிப்படுத்த விரும்பினார் கமல்.
குறும்படம் என்று தீர்மானமாகி விட்டது. எனவே அதற்கு சாக்காக “ராம், ஏடிகே, விக்ரமனுக்குப் புரியல.. விழிப்புணர்வு படம் பார்ப்போம்” என்ற கமல், வீடியோவை ஒளிபரப்பினார். கல்லாப்பெட்டியில் பணத்தை வைக்காமல் குயின்சியின் கூட்டணியோடு தனலஷ்மி சடுகுடு ஆடிக் கொண்டிருக்கும் காட்சிகள் வந்தன.
சபையில் அமர்ந்திருந்த தனலஷ்மி, இந்தக் காட்சிகளைப் பார்த்து மிகையாக விழுந்து விழுந்து சிரித்தார் தனலஷ்மி. கோபம் என்றாலும் மிகை. சிரிப்பு என்றாலும் மிகை. தன் மீதுள்ள தவறு அம்பலப்படுவதை சிரிப்பின் மூலம் கட்டுப்படுத்திக் கொள்ள முயலும் முயற்சி அது. தனலஷ்மியின் அணியில் உள்ளவர்களும் இதைக் காமெடி காட்சியாக நினைத்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
‘ஊழலுக்கு துணை போகாதீர்கள்’ – கமலின் ஆவேச அட்வைஸ்
பிறகு ஆரம்பித்தது கமலின் அந்த தார்மீக ஆவேச உரை. “உங்களை மாதிரியே நானும் சிரிச்சுட்டு போயிட முடியாது. கடத்தல், பதுக்கல், சுரண்டலை வேடிக்கை பார்த்துட்டு இருக்க முடியாது. நீங்கள் செய்தது விதிமீறல். எனவே.. தனலஷ்மி.. உங்கள் வெற்றியை பறிக்கிறேன். மேலும் உங்களுக்கு பரிசாக அளிக்கப்பட்ட ‘நாமினேஷன் ஃப்ரீ ஸோனை’ நியாயமாக விளையாடிய விக்ரமனுக்கு மாற்றி அளிக்கிறேன்” என்று கமல் சொன்னதும் விக்ரமன் அணி உற்சாகமானது. தனலஷ்மியின் முகம் தொங்கிப் போனது.
“தனலஷ்மியை தண்டிக்கிறேன். அவரின் தவறை அழுத்தமாக சுட்டிக் காட்டாமல் கூட இருந்தவர்களை கண்டிக்கிறேன். இது ஒரு மோசடி என்பதாவது உங்களுக்குப் புரிகிறதா.. ‘நம்மாளு’ன்னு விட்டுட முடியாது. தனலஷ்மி. முகத்தை தூக்கி வெச்சுக்காதீங்க. வெற்றியின் போது ஏற்படுகிற அதே கம்பீரம் தவறை உணரும் போதும் வரணும். எந்தவகையிலும் ஊழலுக்கு துணை போகாதீர்கள் என்பதே நான் சொல்லும் செய்தி. லாபத்திற்கு பின்னால் நோ்மை இருக்க வேண்டும். அப்பதான் நிம்மதியா தூக்கம் வரும்..’’
“… இந்த முடிவை நான் எடுத்து பல வருடங்கள் ஆகி விட்டன. பிளாக் மணி இருந்த துறையில் “கணக்கின் படி தாங்க’ என்கிற கறாரான பழக்கத்தை நெடுங்காலமாக பின்பற்றி வருகிறேன். வருமானவரித்துறையில் இதற்காக பாராட்டு கிடைத்தது. அதை வெச்சு வீடு வாங்க முடியாது. ஆனா நிம்மதியா தூங்க முடியும். உணவை அள்ளிப் பதுக்கி வெச்சுக்கற பழக்கம் குரங்குகள் கிட்ட இருக்கு. நாம மரத்தை விட்டு எப்பவோ இறங்கி வந்துட்டோம்.. உங்கள் தவறு இளைய தலைமுறைக்கு முன்னுதாரணமா ஆயிடக்கூடாது. இதுக்காகத்தான் அசிமையும் முன்ன கண்டிச்சேன்.. இந்தக் கோபம் எனக்கு பல வருஷமா இருக்கு. அதைச் சொல்றதுக்கு உங்களை ஒரு கருவியா பயன்படுத்திக்கிட்டேன். நான் பேசறது அரசியல் அல்ல. நேர்மையைப் பற்றியதுன்னு எல்லோருக்கும் புரியணும்” என்று கமல் தார்மீக ஆவேசத்துடன் பேசி முடித்தது சிறப்பானது.
பிக் பாஸ் விளையாட்டில் நிகழ்ந்த தவறை முன்னிட்டு கோடிக்கணக்கில் ஊழல் செய்யும் கொள்ளைக்காரர்களுக்கு கமல் சொல்ல விரும்பிய செய்தி என்று இதைப் புரிந்து கொள்ளலாம்.
பிக் பாஸ் விரித்த வலையில் மாட்டிய தனலஷ்மி
‘யாரும் கவனிக்காமல் இருக்கிற போது கூட பின்பற்றுவதுதான் உண்மையான நேர்மை’ என்றொரு பொன்மொழி உண்டு. ஆனால் இத்தனை காமிராக்கள் விழிப்பாக இருக்கும் போது கூட ‘ஜெயிக்கணும்’ என்கிற வெறி காரணமாக தனலஷ்மி சற்று எல்லை மீறி விட்டார். பிக் பாஸ் தருகிற விதிகளை ‘லேட்டரல் திங்க்கிங்’ மூலம் உடைத்து மாற்று வழியில் சிந்தித்து வெற்றி அடைந்த முன்னோடிகள் இந்த வீட்டில் உண்டு. ஆனால் அது வேறு சமாச்சாரம். ஆனால் தனலஷ்மி செய்தது விதிமீறல்.
“பிக் பாஸ் இதைக் கவனிக்கலை. வெற்றி-ன்னு அறிவிச்சிட்டார்.. மக்களாகிய நாங்க சுப்ரீம் கோர்ட்” என்றெல்லாம் கமல் சொன்னது ஒரு ‘இது’க்காக என்று வைத்துக் கொள்ளலாம். தனலஷ்மி செய்த குளறுபடிகளை பிக் பாஸ் டீம் நிச்சயம் கண்காணித்திருக்கும். என்றாலும் பொறி வைத்து பிடிப்பது போல் வலை விரித்து விஜிலென்ஸ் டீம் மாதிரி தனலஷ்மியை பிடித்து விட்டார்கள். ‘உறுதிமொழி ஏற்றுக் கொண்டு தொகையை அறிவியுங்கள்’ என்று பிக் பாஸ் சொன்னதே ஒருவகையான டிராப்தான். தனலஷ்மி அப்போதாவது உஷாராகி இருக்க வேண்டும். ஆர்வக்கோளாறு அவரின் கண்களை மறைத்து விட்டது.
கமல் பிரேக் சென்று விட்டு சென்றதும் நாம் எதிர்பார்த்தது நிகழ்ந்தது. கண்கலங்க ஆரம்பித்த தனலஷ்மியை ‘பாத்ரூம் போயிடு’ என்று உபதேசித்தார் ஆயிஷா. சில நிமிடங்களில் பாத்ரூம் ஏரியாவில் இருந்து பேரவலக்குரல் கேட்டது. அப்படியொரு அழுகையை அழுது தீர்த்தார் தனலஷ்மி. பார்வையாளர்களின் கைத்தட்டல் காரணமாக ஏற்கெனவே மனஉளைச்சலில் இருந்தவருக்கு இதுவொரு கூடுதல் சுமை.
‘திருட்டுப்பழின்னு சொல்லிட்டாங்க’ என்று குமுறிய தனலஷ்மியிடம் ‘இது விதிமீறல்ன்னுதான் சொன்னாங்க.. உன்னை மட்டுமல்ல, டீம்ல இருந்த எல்லோரையும்தானே சொன்னாங்க.. நான் கூட அவர் சொன்னதுக்கு முன்ன மனம் உடைஞ்சுட்டேன்.. நீயும் அதையே பண்ணாத” என்று ஆயிஷா சொன்னது நல்ல உபதேசம். “ஆமாம் சார். விளையாட்டு ஆர்வத்தில் தவறு இழைத்து விட்டேன். இனி அது நடக்காது” என்று சபையிலேயே தனலஷ்மி சொல்லியிருந்தால் இது சுமூகமாக முடிந்து போயிருக்கக்கூடும்.
மகேஸ்வரியின் எவிக்ஷன் கார்டை நீட்டிய கமல்
பிரேக் முடிந்து எவிக்ஷன் கார்டுடன் வந்தார் கமல். ராம், மகேஸ்வரி, தனலஷ்மி ஆகிய மூவரும் பாக்கி. இதில் ராம் வெளியே செல்வார் என்றுதான் பலரும் எதிர்பார்த்திருப்பார்கள். ‘எனக்கு டவுட்டாதான் இருக்கு’ என்றார் மகேஸ்வரி. “வாழ்க்கைல எது சார் நிரந்தரம்.. போனாலும் சரி. இருந்தாலும் சரி’ என்பது மாதிரி தத்துவம் பேசினார் ராம். ‘மகேஸ்வரியும் ராமும் இருப்பாங்க’ என்று யூகித்த தனலஷ்மியிடம் ‘நீங்க போடற கணக்கு பல சமயங்கள்ல தவறா இருக்கு. சில சமயங்கள்ல சரியா இருக்கு.. நீங்க SAVED” என்று இன்ப அதிர்ச்சி தந்தார் கமல். ஆனால் தனலஷ்மியின் முகத்தில் பெரிதான ரியாக்ஷன் இல்லை.
“ஓகே.. அதிகம் சஸ்பென்ஸ் வேண்டாம்’ என்பது மாதிரி எவிக்ஷன் கார்டை கமல் காட்ட அதில் மகேஸ்வரியின் பெயர் இருந்தது. இது ராமிற்கே அதிர்ச்சியாக இருந்திருக்கலாம். ஏமாற்றம் என்றாலும் அதை மறைத்துக் கொண்டு இயல்பான புன்னகையுடன் கிளம்பிய மகேஸ்வரியை எல்லோரும் வழியனுப்பினார்கள். ஆனால் ஏடிகே மட்டும் பின்னால் தயங்கித் தயங்கி நின்றார். மகேஸ்வரியாவது அவரை இழுத்து கை கொடுத்திருக்கலாம்.
அழுது ஓய்ந்திருந்த தனலஷ்மியிடம் “ஆக்சுவலி. இப்படி ஆகும்னு எனக்கு முன்னாடியே தெரியும்” என்று சமாதானப்படுத்த வந்த குயின்சி மற்றும் ரச்சிதாவிடம் “நானே பழியை ஏத்துக்கறேன்.. விடுங்க” என்று எரிச்சலுடன் விலகிச் சென்றார் தனலஷ்மி. இப்படிப்பட்ட attitude-தான் ஒருவருக்கு பெரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும். “இந்தப் பொண்ணு கிட்ட அப்ப சொல்லியிருந்தா கூட கேட்டிருக்காது” என்பது குயின்சியின் தயக்கம். அதில் நியாயமும் உள்ளது. “ஓனர் நான்தான். நான் சொல்றத செய்” என்று தனலஷ்மி முகத்தைக் காட்டியிருக்கலாம்.
சுகுமாரன் கவிதைகள் – நூல் அறிமுகம்
‘புத்தகப் பரிந்துரை’ பகுதிக்கு வந்தார் கமல். இந்த வாரம் அவர் அறிமுகப்படுத்தியது ‘சுகுமாரன் கவிதைகள்’. கவிஞர் என்பதைத் தாண்டி மொழிபெயர்ப்பாளர், பத்திரிகையாளர், தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் என்று பல முகங்கள் சுகுமாரனுக்கு உண்டு.
புத்தகத்தைப் பற்றி தன்னுடைய அறிமுக உரையில் கமல் சொன்னது: ‘ எழுபதுகளில் லட்சியவாதக் கனவுகள் சற்று கலைந்து போயிருந்த சமயம். பொதுவுடைமைச் சிந்தனை, மனித நேயச் சிந்தனை கொண்டவர்களுக்கு விரக்தியும் ஆதங்கமும் கோபமும் ஏற்பட்டது. இந்த உணர்வுகளின் அடிப்படையில் தன்னை மையப்படுத்திக் கொண்டு சுகுமாரன் எழுதிய கவிதைகள்தான் இந்த நூல். இன்றும் கூட அந்த ஆதங்கம் நீடிக்கிறது. இந்தக் கவிதைகள் அந்த ஆதங்கத்தை தணிக்கும் என்று நம்புகிறேன்” என்றார் கமல்.
‘வாங்க மகேஸ்வரி’ என்று மேடைக்கு அழைத்தார் கமல். “காமிராக்காக நான் எதுவும் பண்ணலை. இந்த எவிக்ஷன் எனக்கு ஒன்றும் பெரிய ஆச்சரியமில்ல. என் பையனோட சேர்ந்து விடுமுறைத் தினங்களை அனுபவிக்க முடியும். நான் ஹாப்பிதான்” என்று சொன்ன மகேஸ்வரி, அகம் வழியாக வந்து அனைவரிடமும் விடைபெற்று ஏடிகேவை தனியாக விசாரித்தது நல்ல பண்பு. ‘மகேஸ்வரிக்கு விடை தராத’ செயல் ஏற்படுத்திய குற்றவுணர்வு காரணமாக பிறகு அழுது கொண்டிருந்த ஏடிகேவை மற்றவர்கள் சமாதானப்படுத்தினார்கள். ‘இங்க இருக்கற வரைக்கும்தான் சண்டை’ என்று தத்துவம் பேசினார் அசிம்.
‘இந்த டிவிஸ்ட்டை எதிர்பார்க்கலை’ என்று மகேஸ்வரியின் வெளியேற்றத்தைப் பற்றி விக்ரமனும் ஷிவினும் வருத்தத்துடன் குறிப்பிட்டார்கள். ‘இருபத்தோரு நபர்களுடன் ஆரம்பித்த இந்த விளையாட்டு, இப்போது பதினாறு நபர்களாக சுருங்கியிருக்கிறது. பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்கிறார்களா என்று பார்ப்போம்” என்று கமலும் விடைபெற்றுக் கொண்டார்.
‘பிக் பாஸ் விளையாட்டுக்களில் அறம் இருக்கிறதா?’
‘குறைஞ்ச ஓட்டுல தப்பிச்சதெல்லாம் ஒரு வெற்றியா?’ என்று ராம் அனத்த ‘ஒரு ஓட்டில் வென்றாலும் அது வெற்றிதான்’ என்று விக்ரமன் சொன்னது சரியான செய்தி. ‘இவன்தான் போயிடுவான்’னு நெனச்சேன்’ என்று ராமைச் சுட்டிக் காட்டி ராபர்ட் ஜாலியாக சொல்ல “என்ன… இப்ப.. இந்த வாரமோ. அடுத்த வாரமோ..’ என்று வீட்டிற்கு வெளியேயே வாழும் விரக்தியில் பேசினார் ராம்.
‘பெல்ட் ஏரியால நாம உயிரைக் கொடுத்து அப்படி கஷ்டப்பட்டோம்.. ஆனா சிரமப்படாதவங்க எல்லாம் உள்ளே பரம சௌக்கியமா இருக்காங்க’ என்று கதிரவனிடம் ராம் ஆதங்கப்பட ‘மக்கள் போன வார சம்பவங்களை வெச்சு வாக்களிச்சிருப்பாங்க. இதெல்லாம் இந்த வாரம்தானே நடந்தது.. வெயிட் பண்ணு’ என்று சரியான ஆறுதலைச் சொன்னார் கதிரவன்.
“உண்மையான பொண்ணு ஜனனியாம். அமுதவாணன் சொல்றாரு.. நான் உண்மையா விளையாடறது தப்பா..” என்று இன்னமும் அழுகையை நீட்டித்து அனத்திக் கொண்டிருந்தார் தனலஷ்மி. ஒருவர் தனக்கு உண்மையாக இருப்பது முக்கியம்தான். ஆனால் அதில் நியாயமும் இருக்கிறதா என்கிற பரிசீலனையும் முக்கியம்.
“நண்பராக இருந்தாலும் தப்பை எடுத்துச் சொல்லணும். இப்ப தலைகுனிவு ஏற்பட்டு விட்டது…. நான் சும்மா விளையாடிதற்கு தனலஷ்மி கோபித்துக் கொண்டா” என்று ராமிடம் புலம்பிய ஜனனி “நீங்கள் என்னை பகடைக்காயாக பயன்படுத்தவில்லை. உண்மையாத்தானே பழகறீங்க..” என்று அமுதவாணனிடம் சொல்ல “உன் மேல இருக்கற பாசமெல்லாம் எப்பவும் போகாது.. அதெல்லாம் வெளில வெச்சுக்கலாம்” என்று சரியான ரூட்டில் அமுதவாணன். பதில் சொன்னதோடு எபிசோட் நிறைந்தது.
‘எந்த வகையிலும் ஊழலுக்கு துணை போகக்கூடாது’ என்று கமல் சொல்லும் நீதி சரிதான். ஆனால் பிக் பாஸ் ஆட்டத்தின் விதிகளிலேயே அடிப்படையான குளறுபடிகள் கணிசமாக உள்ளன. உதாரணத்திற்கு எந்தவொரு ஃபேக்டரியிலும் உற்பத்திக்கான மூலப்பொருட்களை தொழிலாளர்களுக்கு முறையாக வழங்குவார்களே தவிர, ‘நாங்கள் தூக்கிப் போடுவோம். நீங்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு எடுங்கள்’ என்று சொல்ல மாட்டார்கள்.
உடல் ரீதியான வன்முறை விளையாட்டு, அதன் மூலம் நிகழும் கலவரங்கள் போன்வற்றை விட்டு விட்டு அறிவார்ந்த சுவாரசியமான ஆட்டங்களை பிக் பாஸ் டீம் உற்பத்தி செய்யலாம். ஆனால் செய்வார்களா? மாட்டார்கள். எனில் பரபரப்பை ஏற்படுத்த முடியாது. கல்லா கட்ட முடியாது.