டெல்லி: பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியில் இருந்து தன்னை நீக்கும் கேரள அரசின் அவசர சட்டத்தை பரிசீலனை செய்யாமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க இருப்பதாக ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்களில் துணை வேந்தராக, ஆளுங்கட்சி தரப்பு நியமனங்களுக்கு கேரள ஆளுநர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். 9 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை ஆளுநர் ராஜினாமா செய்ய உத்தரவிட்டது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் முதலமைச்சர் பினராயி விஜயன் அரசுக்கும், ஆளுநர் ஆரிப் கானுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கும் அவசர சட்டத்தை பிறப்பிக்க கடந்த 9ம் தேதி கேரள அமைச்சரவை முடிவு செய்தது.
அதன் தொடர்ச்சியாக அவசர சட்டத்தை இயற்றி ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கு கேரள அரசு அனுப்பி வைத்துள்ளது. இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள ஆளுநர் ஆரிப் கான், கேரள அரசின் அவசர சட்டத்தை இன்னும் படித்து பார்க்கவில்லை என்று கூறினார். தன்னை குறிவைத்து இயற்றப்பட்டுள்ள சட்டத்திற்கு நானே நீதிபதியாக மாட்டேன் என்று குறிப்பிட்ட கான், முதலில் அதனை விரைவில் படித்து பார்க்க இருப்பதாக தெரிவித்தார். அவசர சட்டத்தின் நோக்கம் தன்னை குறிவைப்பதாக இருந்தால், அதனை பரிசீலிக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க இருப்பதாக கேரள ஆளுநர் கேரள ஆரிப் முகமது கான் தெரிவித்திருக்கிறார்.