தூத்துக்குடியில் வீடு புகுந்து விசிக பிரமுகரை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை அடுத்த அந்தோனியார்புரத்தை சேர்ந்த மாரிமுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உறுப்பினராக உள்ளார். இவர் வீட்டில் இருந்த பொழுது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் மாரிமுத்துவை அறிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். அவர்களை தடுக்க முயன்ற மாரிமுத்துவின் மகன் கருணாகரனை தாக்கி விட்டு சென்றுள்ளனர்.
இந்த தாக்குதலில் காயம் அடைந்த கருணாகரன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தென்பாக்கம் போலீசார் கருணாகரனிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் தேவர் ஜெயந்திக்காக ஒட்டப்பட்ட போஸ்டரை மாரிமுத்துவின் மகன் கருணாகரன் கிழித்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட முன் விரோதத்தால் மாரிமுத்துவை அதே பகுதியை சேர்ந்த முகேஷ், முத்துப்பாண்டி, முத்துலிங்கம் ஆகியோர் வீடு புகுந்து மாரிமுத்துவை வெட்டி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.