தேனி: தேனி மாவட்டம் போடி அருகே மலை பகுதியில் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் வடமேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்தது. தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக வடக்கு மலை பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கத்திரிக்காய் ஓடை வழியாக வெள்ளம் ஓடியதால் பாறைகள் உருண்டு, நீரும் பாதை மாறி விளைநிலங்களுக்குள் புகுந்தது. அதனோடு பாறைகளும் உருண்டு வந்து பயிர்களை சேதப்படுத்தின.
இலங்காவரிசை, அத்தியுத்து, விரைமுத்து, சித்தாறு குழி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட ஏலக்காய், காப்பி, நெல்லி, மிளகு, இளவுபலா, ஆரஞ்சு, எலுமிச்சை உள்ளிட்ட விவசாய விளைபொருட்கள் சேதமடைந்தன. இதனால் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். காட்டாற்று வெள்ளத்தால் வடக்குமலை பகுதிக்கு செல்லும் பாதையும் துண்டிக்கப்பட்டது.