ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் ஆறு பேர் நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். அதில் இலங்கையைச் சேர்ந்த முருகன், சாந்தன் ,ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள நால்வருக்கும் சரியான அடிப்படை வசதி செய்து தரவில்லை எனவும் சரியான உணவு வழங்குவதில்லை என குற்றம் சாட்டி நால்வரும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் திருச்சி சிறப்பு முகாமிற்கு வருகை தந்த திருச்சி மாவட்ட ஆட்சியர் நால்வரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் சிறப்பு முகாமில் உள்ள நான்கு பேரையும் அவர்களின் சொந்த நாடான இலங்கைக்கு திருப்பி அனுப்பும் பணிகள் நடைபெற்ற வருவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில் “திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள நான்கு பேருக்கும் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்பட்டுள்ளது. சிறப்பு முகாமில் உள்ள மற்ற கைதிகளுடன் தொடர்பு கொள்ளாத வகையில் நால்வருக்கும் சிறப்பு தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்கள் நான்கு பேரும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. அவர்களில் ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயராமன் வெளியில் நடை பயிற்சி மேற்கொள்ள தேவையான இடம் வேண்டுமென கோரிக்கை வைத்தனர். அதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக உறுதியளித்துள்ளேன். சிறப்பு முகாம் என்பது வெளிநாட்டினர் ஏதேனும் தவறு செய்து அவர்கள் ஜாமீன் வாங்கினாலும் அல்லது விடுதலை ஆனாலும் அவர்களுக்கான குடியுரிமை இந்தியாவில் கிடையாது என்பதால் அவர்கள் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுவார்கள்.
அவர்கள் எந்த நாட்டிற்கு செல்ல விரும்புகிறார்களோ அந்த நாட்டில் இருந்து உத்தரவு கிடைத்த பின்னர் அவர்கள் அந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். எந்த வெளிநாட்டினராக இருந்தாலும் இந்த நடைமுறையை கடைபிடிக்கப்படுகிறது. இலங்கையிலிருந்து அனுமதி கடிதம் வரும் வரை இங்கே தங்க வைக்கப்படுவார்கள். சிறப்பு முகாமில் இருக்கும் நால்வருக்கும் அவர்கள் கேட்கும் உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளேன். அவர்களின் ரத்த சொந்தங்கள் அல்லது உறவினர்கள் வந்து நேரில் பார்ப்பதற்கு எந்த தடையும் இல்லை. அதற்கான நேரக் கட்டுப்பாடு என்பதும் கிடையாது. சிறப்பு முகாம் அதிகாரிகளின் ஒப்புதலோடு பார்ப்பதற்கு எந்த தடையும் கிடையாது. இவர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது” என செய்தியாளர்கள் சந்திப்பில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கைச் சேர்ந்த 4 பேர் மீது போலி பாஸ்போர்ட் வழக்கு நிலுவையில் உள்ளதால் அந்த வழக்கு முடிந்த பின்னரே சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் என தெரிய வருகிறது. தற்பொழுது திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும் முருகனை அவருடைய மனைவி நளினி இன்று சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.