திருமணம் செய்துக்கொள்ள கேட்டு வற்புறுத்தி வந்த காதலியை 35 துண்டுகளாக வெட்டி வெவ்வேறு இடங்களில் வீசிய காதலனை டெல்லி போலீஸ் கைது செய்திருக்கும் சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
போலீசாரின் கூற்றுப்படி, “அஃப்தப் அமீன் பூனாவாலா தனது லிவ்-இன் பார்ட்டனரான ஷ்ரத்தாவை கடந்த மே 18ம் தேதி கழுத்தை நெறித்து கொன்றதோடு, அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜில் வைத்து வைத்திருக்கிறார்.
18 நாட்கள் கழித்து நள்ளிரவு 2 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறிய அஃப்தப், துண்டுத் துண்டாக வெட்டிய காதலியின் உடலை டெல்லியின் வெவ்வேறு இடங்களில் வீசியிருக்கிறார்.” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
26 வயதான ஷ்ரத்தா மும்மையில் உள்ள ஒரு மல்டிலெவல் நிறுவனத்தின் கால் சென்டரில் பணியாற்றி வந்திருக்கிறார். அங்குதான் அஃப்தப் அமீன் பூனாவாலாவை சந்தித்திருக்கிறார். இருவரும் நட்பாக பழகியதை அடுத்து காதலித்தும் வந்திருக்கிறார்கள்.
இவர்களது காதலுக்கு ஷரத்தாவின் பெற்றொர் சம்மதிக்காததால் வீட்டை விட்டு வெளியே அஃப்தப் அமீனுடன் டெல்லியில் உள்ள மெஹ்ரவ்லியில் குடியேற்றி லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
இதனையடுத்து ஷரத்தா தனது பெற்றோருடனான எந்த தொடர்பும் இல்லாமல் இருந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த நவம்பர் 8ம் தேதி ஷரத்தாவின் தந்தை விகாஸ் மதான் டெல்லிக்கு வந்து தனது மகள் இருக்கும் இடத்தை அடைந்திருக்கிறார்.
அங்கு ஷரத்தா இருந்த வீடு பூட்டியிருந்ததால் சந்தேகமடைந்த விகாஸ், மெஹ்ரவ்லி காவல் நிலையத்தில் தனது மகளை கடத்திவிட்டதாக அஃப்தப் மீது புகார் கொடுத்திருக்கிறார். புகாரின் பேரில் கடந்த நவம்பர் 12ம் தேதி அஃப்தப் அமீன் பூனாவாலாவை போலீசார் கைது செய்தனர்.
அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்தான் நடந்த விவரங்கள் தெரிய வந்திருக்கிறது. அதன்படி, லிவ்-இன் வாழ்க்கையில் இருந்து வந்த ஷரத்தாவுக்கும் அஃப்தப்புக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்திருக்கிறது. அதில் தன்னை திருமணம் செய்துக்கொள்ளும்படி ஷ்ரத்தா அஃப்தப்பிடம் தொடர்ந்து கேட்டு வந்திருக்கிறார்.
இது தொடர்பான பிரச்னையின் போதுதான் ஷ்ரத்தாவை கழுத்தை நெறித்து கொன்று துண்டுத் துண்டாக்கி வெட்டி வெவ்வேறு இடங்களில் அஃப்தப் வீசியிருப்பது அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிந்து, ஷ்ரத்தாவின் உடல் பாகங்களை போலீசார் தேடி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM