கொரோனா தொற்று நோயின் தீவிரத்தில் இருந்து இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வரும் நிலையில், இந்தியா முழுவதும், குறிப்பாக வட மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் மீண்டும் அதிகரித்து வருகிறது.
டெங்கு என்பது கொசுக்களால் பரவும் ஒரு வைரஸ் நோயாகும். டெங்கு வைரஸ் குறிப்பாக ஏடிஸ் என்ற கொசுக்கள் மூலமே பரவி வருகிறது. ஏடிஸ் இனத்தின் பெண் கொசுக்களால் டெங்கு வைரஸ் பரவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். உலகெங்கிலும் ஆண்டுக்கு 6 கோடி பேர் டெங்குவினால் பாதிக்கப்படுவதாக தரவுகள் கூறுகின்றன. குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் வயது வந்தவர்களையும் பாதிக்கும் இந்நோய், பொதுவாக உயிரிழப்புகளை ஏற்படுத்துவதில்லை என்றாலும், சில சமயங்களில் உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகிறது.
சமீபத்திய ஆண்டுகளில் உலகின் பல்வேறு பகுதிகளில் டெங்கு வைரஸ் வேகமாக பரவி வருகிறது. உலக சுகாதார மையத்தில் பதிவாகும் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் குறிப்பாக வட மாநிலங்களில் டெங்கு டெங்கு காய்ச்சல் மீண்டும் அதிகரித்து வருகிறது.
டெல்லியில் இந்த ஆண்டு டெங்கு தொடர்பான முதல் மரணம் பதிவாகியுள்ளது. இதற்கிடையில், உத்தரப்பிரதேச அரசு கொசுக்களால் பரவும் நோய்க்கு எதிரான நடவடிக்கையை முழு வீச்சில் தொடங்கியுள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு நோயாளிகளுக்கு சிறப்பு வார்டுகளை அமைத்தும் அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திலும் கொசுக்கள் மூலம் பரவும் நோய்களுக்கான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மற்றொரு சுகாதார அவசரநிலைக்கு அச்சுறுத்தலாக டெங்கு இருக்கும் நிலையில், இந்த தொற்றுக்கு எதிரான தடுப்பூசி இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பான முதற்கட்ட சோதனைக்கு ஏற்கனவே அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் டெங்கு தடுப்பூசியை தயாரிப்பது யார்?
தடுப்பூசி தயாரிப்பாளரான இந்தியன் இம்யூனாலஜிகல்ஸ் லிமிடெட் (Indian Immunologicals Limited – IIL) இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசியை உருவாக்கி வருகிறது. முதற்கட்ட சோதனைக்கான அனுமதியையும் இந்த நிறுவனம் பெற்றுள்ளது. இது அமெரிக்காவை தளமாகக் கொண்ட தேசிய சுகாதார நிறுவனத்துடன் இணைந்து டெங்குவிற்கு எதிரான தடுப்பூசியை தயாரித்து வருகிறது.
இந்தியன் இம்யூனாலஜிகல்ஸ் லிமிடெட் தவிர, Panacea Biotec Limited மற்றும் Sanofi India Private Limited ஆகிய இரண்டு நிறுவனங்களும் டெங்கு தடுப்பூசிகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இருப்பினும், இந்த இரண்டு தடுப்பூசிகள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தப்படவில்லை.
உலக பால்வள உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியன் இம்யூனாலஜிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் கே.ஆனந்த் குமார் கூறுகையில், தடுப்பூசிக்கு முதற்கட்ட சோதனைகள் நடத்த அனுமதி கிடைத்துள்ளதாகவும், விலங்குகள் மீதான சோதனைகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உலகில் டெங்கு தடுப்பூசிகள்
இதுவரை, சனோஃபியின் டெங்வாக்ஸியா ( Dengvaxia) மட்டுமே உலகளவில் உரிமம் பெற்ற டெங்கு தடுப்பூசியாக உள்ளது. கூடுதலாக, டேகேடா மற்றும் அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் ஆகியவையும் தடுப்பூசி தயாரிப்பில் உள்ளன. தடுப்பூசி சோதனைக்கான அனுமதிக்காக இவை காத்திருக்கின்றன. உள்ளூர் மக்களிடம் க்ளினிக்கல் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளாத வரை, சனோஃபி நிறுவனத்தின் தடுப்பூசியான டெங்வாக்ஸியாவை நிபுணர் குழு அங்கீகரிக்க மறுத்தது நினைவுகூரத்தக்கது.
உலகின் முதல் டெங்கு தடுப்பூசி?
உலகின் முதல் டெங்கு தடுப்பூசி ஸ்பெயினின் செயிண்ட் லூயிஸ் பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதை அங்கீகரித்த முதல் நாடு மெக்சிகோ. இருப்பினும், மற்ற நாடுகள் தயாரித்த டெங்கு தடுப்பூசிக்கு இந்தியா இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.
National Center for Vector Borne Diseases Control (NCVBDC) கூற்றுப்படி, 2021ஆம் ஆண்டில் இந்தியாவில் 1,93,245 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 346 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.