வங்கி வாடிக்கையாளர்களே.. வரும் 19ம் தேதி ஊழியர்கள் ‘ஸ்டிரைக்’..!

வங்கிகள் மற்றும் ஊழியர்களுக்கு இடையேயான பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கோரி, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் வரும் 19-ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஊழியர்களின் ஊதியம், வேலை ஒப்பந்தம், சேவையை மேம்படுத்துதல், வங்கிகளில் கணினி மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இரு தரப்பு ஒப்பந்தங்கள் வாயிலாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் நிறைவேற்றி உள்ளது.

ஆனால் சில வங்கிகள், இருதரப்பு ஒப்பந்தங்களை மதிக்காமல், தன்னிச்சையாக முடிவு எடுக்கின்றன. சில வங்கிகள், ஊழியர்களை ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு இடமாற்றம் செய்கின்றன. ஒரு வங்கியில் மட்டும் 3,000 ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொழிலாளர் சட்டத்தை மீறும் செயல். சில வங்கிகள் பணத்தை பெற்று, ஊழியர், துப்புரவு ஊழியர் ஆகிய பணிகளுக்கு நிரந்தர ஊழியர்களை நியமிக்காமல், அயல்பணி வாயிலாக தனியாருக்கு வழங்க முடிவு செய்துள்ளன.

ஒரு முன்னணி வங்கி, பொதுமக்களிடம் வைப்புத் தொகை வசூலிக்கும் பணியில் ஈடுபட்ட 240 ஊழியர்களை பணி நீக்கம் செய்ததுடன், அவர்களுக்கான எவ்வித இழப்பீட்டையும் வழங்கவில்லை. எனவே, இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் வேலைநிறுத்தம் செய்வதற்காக வங்கி ஊழியர் சங்கம் நோட்டீஸ் அளித்துள்ளது.

தலைமை தொழிலாளர் நலத்துறை கமிஷனருடன் நாளை மறுதினம் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இதில் தீர்வு காணாவிட்டால், வரும் 19-ம் தேதி நாடு தழுவிய அளவில் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.