சிட்னி,
ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் தொடங்கிய 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்றைய தினம் நிறைவடைந்தது. மெல்போர்னில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி இங்கிலாந்தின் அபாரமான பந்துவீச்சால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸ் அதிரடியால் 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 2-வது முறையாக உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
உலகக் கோப்பையை வென்ற ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. கிரிக்கெட் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் உட்பட பலரும் இங்கிலாந்து அணிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
வெற்றி பெற்ற இங்கிலாந்து அணிக்கு பரிசு தொகையாக ரூ.13.84 கோடி வழங்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி ரூ.7.40 கோடியை பரிசாக பெறுகிறது.
அதே சமயம் அரை இறுதியில் தோல்வி அடைந்த மற்ற அணிகளுக்கு ரூ.4.19 கோடி பரிசாக வழங்கப்படுகிறது. இதில் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி நியூசிலாந்தை விட கூடுதலாக ஒரு போட்டியில் வெற்றி பெற்றதால், இந்திய அணிக்கு ரூ.4.50 கோடி பரிசாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க்கது.