அனுமதியின்றி அமைத்த மின்வேலி காவு வாங்கியது வேட்டைநாய்களுடன் வாலிபர் மின்சாரம் தாக்கி பரிதாபச் சாவு-அலங்காநல்லூர் அருகே சோகம்

அலங்காநல்லூர் : அலங்காநல்லூர் அருகே வேட்டைக்கு சென்ற வாலிபர், அவரது 5 வேட்டை நாய்கள் மின்சாரம் தாக்கி பலியானது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து, முறைகேடாக மின்வேலி அமைத்த விவசாயியை கைது செய்தனர்.மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் (35). திருமணம் ஆகாதவர். இவர் வேட்டை நாய்கள் வளர்த்து வந்தார். இரவு நேரங்களில் அருகில் உள்ள வயல்வெளிகளுக்குச் சென்று முயல், காட்டுப்பன்றி உள்ளிட்டவை வேட்டையாடி வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் மாணிக்கம், புதுப்பட்டி அருகே உள்ள கொண்டையம்பட்டி மலையடிவாரப்பகுதிக்கு வேட்டைக்கு நாய்களை அழைத்துச் சென்றுள்ளார். அப்பகுதியில் வனவிலங்குகளிடம் இருந்து விவசாயப் பயிர்களை பாதுகாப்பதற்காக விவசாயிகள் அனுமதியின்றி முறைகேடாக உயரழுத்த மின்கம்பிகளில் இருந்து கொக்கி போட்டு மின் இணைப்பு கொடுத்து மின்வேலி அமைத்திருந்தனர். மேலும் அதனை துண்டிக்காமல் இருந்துள்ளனர்.

இது தெரியாமல், மாணிக்கம் வேட்டைக்கு அழைத்துச் சென்ற 5 நாய்கள் முதலில் மின்கம்பிகளை மிதித்து ஒவ்வொன்றாக பலியானது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாணிக்கம், நாய்களை காப்பாற்ற முயன்றார்.அப்போது அவரையும் மின்சாரம் தாக்கி, சம்பவ இடத்திலேயே பலியானார். நேற்று அதிகாலை அப்பகுதிக்கு சென்ற விவசாயிகள் நாய்களுடன் ஒரு நபர் இறந்து கிடப்பதாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அலங்காநல்லூர் போலீசார், மாணிக்கத்தின் உடலை கைப்பற்றி, இறப்புக்காக காரணம் குறித்து விசாரித்தனர். பின்னர் மாணிக்கத்தின் உடலை மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்த நாய்களை கால்நடைத்துறை மருத்துவரிடம் உடல்கூறு ஆய்வுக்காக ஒப்படைத்தனர்.

விசாரணையில், அனுமதியின்றி அமைத்த மின்வேலியில் இருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இப்பகுதியில் உள்ள விளைநிலங்களில் வனவிலங்குகள் அச்சுறுத்தல் காரணமாக விவசாயிகள் முறைகேடாக மின்வேலி அமைத்துள்ளது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். இப்பகுதியில் மின்சார வாரியம் ஆய்வு மேற்கொண்டு, உயிருக்கு ஆபத்தான முறையில் அனுமதியின்றி மின்வேலி அமைத்துள்ள விவசாயிகளிடம் விசாரணை நடத்த போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

உரிய அனுமதி பெறாமல் மின்வேலி அமைத்து உயிர் பலி ஏற்பட காரணமாக இருந்த அய்யனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அசோக்குமார் மீது அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.